சாமி படங்கள் முன்பு ஏற்றிய தீபத்தை அணைக்காமல் சென்றதால் ஜோதிடர் வீடு தீப்பிடித்து எரிந்தது
வீரபாண்டியில் ஜோதிடர் வீடு தீப்பிடித்ததில் 3 லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமானது. சாமி படங்கள் முன்பு ஏற்றிய தீபத்தை அணைக்காமல் சென்றதால் இந்த சம்பவம் நடந்து விட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படு வதாவது:-
வீரபாண்டி,
திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நாட்ராயம் (வயது 55). ஜோதிடர். இவர் 25 ஆண்டுகளாக அந்த பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் நாட்ராயம் மட்டும் வீட்டில் இருந்து வந்தார்.
இவர், தினமும் காலையில் வீட்டின் பூஜையறையில் உள்ள சாமி படங்கள் முன்பு தீபம் ஏற்றி, வழிபட்டு அதன்பின்னரே ஜோதிடம் பார்க்க வெளியில் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அதன்படி நேற்று காலையில் வழக்கம் போல் எழுந்த நாட்ராயம், சாமி படங்கள் முன்பு தீபம் ஏற்றி வழிபட்டார். பின்னர் தீபத்தை அணைக்காமல் வீட்டின் கதவை காலை 8 மணிக்கு பூட்டி விட்டு ஜோதிடம் பார்க்க வெளியே சென்று விட்டார்.
இந்த நிலையில் காலை 8.30 மணிக்கு அவருடைய வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் உடனே திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ வீட்டிற்கு விரைந்து வந்தனர். அதற்குள் அவருடைய ஓட்டு வீடு முழுவதும் தீ பரவி மளமளவென்று எரியத்தொடங்கியது. தீயணைப்பு துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
அதன் பின்னர் வீட்டிற்குள் சென்று தீயணைப்பு வீரர்கள் பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டுகளும் தீயில் எரிந்து கருகிப்போயிருந்தது. ஆனால் எவ்வளவு பணம் என்று தெரியவில்லை. இது குறித்து ஜோதிடர் நாட்ராயமிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் பதறி துடித்து வீட்டிற்கு ஓடோடி வந்தார். அவரிடம் வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் பீரோவில் ரூ.3 லட்சம் இருந்ததாக நாட்ராயம் போலீசாரிடம் தெரிவித்தார். தீ விபத்தில் ரூ.3 லட்சம் மற்றும் வீட்டில் இருந்த சேலைகள், துணிகள், பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆனது. மேலும் 3 பவுன் நகையும் உருகிப்போயிருப்பது தெரியவந்தது.
விசாரணையில் சாமி படம் முன்பாக வைக்கப்பட்ட தீபத்தை அணைக்காமல் சென்றதால், அந்த தீபம் சாமி படம் மீது விழுந்து சாமி படம் தீப்பிடித்து, அந்த தீ வீடு முழுவதும் பரவியது தெரியவந்தது. இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாமி படம் முன்பு வைத்து இருந்த தீபத்தை அணைக்காமல் சென்றதால் ஜோதிடர் வீடு தீப்பிடித்து ரூபாய் நோட்டுகள் 3 லட்சம் எரிந்து நாசம் ஆன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.