மோடமங்கலத்தில் 186 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா அமைச்சர் தங்கமணி வழங்கினார்

மோடமங்கலத்தில் 186 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

Update: 2019-03-05 23:00 GMT
குமாரபாளையம்,

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, மோடமங்கலத்தில் வருவாய்த்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.செல்வக்குமார சின்னையன் முன்னிலை வகித்தார்.

இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி 186 பயனாளிகளுக்கு ரூ.74.40 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. அரசு எண்ணற்ற நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. குமாரபாளையம் தாலுகா பகுதிகளில் வெளியூர்களில் இருந்து வேலைக்காக ஏராளமான நபர்கள் வருவதால் அவர்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வழங்கப்பட்டது. 1½ ஆண்டு காலத்திற்குள் குடிநீர் திட்டப்பணிகள் முடிவுற்று குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இல்லாத நிலைமையை அரசு உருவாக்கி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் டி.கே.சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகர்மன்ற முன்னாள் தலைவர் வெள்ளியங்கிரி, தண்ணீர்பந்தல்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம், தாசில்தார் ரகுநாதன், திருச்செங்கோடு அரசு வக்கீல் சந்திரசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்