கலெக்டர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை முழக்க போராட்டம்
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை முழக்க போராட்டம் நடத்தினார்கள்.
கடலூர்,
கடலூர் புதிய கலெக்டர் அலுவலக வளாகத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கோரிக்கை முழக்க போராட்டம் நடந்தது.
விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும், கடந்த 30 ஆண்டுகளில் ஏழைகளுக்கு வழங்கப்பட்ட மனை பட்டாக்களை கிராம அடங்கலில் பதிவு செய்யாமல் இருப்பதால், வீடு கட்ட வங்கிக்கடன் கூட வாங்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே மனைப்பட்டாவை கிராம அடங்கலில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். கடலூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், பண்ருட்டி ஒன்றிய செயலாளர் பன்னீர், புவனகிரி ஒன்றிய செயலாளர் மணி, கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் நெடுஞ்சேரலாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் செல்லையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இப்போராட்டத்தில் ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சிறிது நேரம் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷம் எழுப்பி விட்டு கலைந்து சென்றனர்.