தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து 2-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-03-05 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் 39 தாசில்தார்கள் பணியாற்றி வருகின்றனர். நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் கட்டமாக 10 தாசில்தார்கள் வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும் 29 தாசில்தாருக்கு பணி மாறுதலுக்கான பணிகள் நடந்து வருவதாக தெரிகிறது. இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் 30 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 28 பேர் வேறு மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து திருவாரூர் தாசில்தார் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள், ஊழியர்கள் பணி பதிவேட்டில் கையெழுத்து போட்டு விட்டு அலுவலகத்திற்குள் எந்த பணியும் செய்யாமல் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 2 நாட்களாக அரசு பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. புகார் அளிக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து மாலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அலுவலர்கள், ஊழியர் கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் நேற்று 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசு பணிகள் முடங்கியுள்ளது. மேலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகள் ரூ.2 ஆயிரம் பெறும் திட்டத்தில் பயனாளிகளின் விண்ணப்பங்கள் கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குடவாசல் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் 2-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மண்டல துணை தாசில்தார்கள், வட்ட தலைவர் கண்ணன், வருவாய்த்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்