குன்றக்குடி அருகே, நண்பரை கொன்றவரை அரிவாளால் வெட்டிய கும்பல் - போலீசார் வலைவீச்சு
குன்றக்குடி அருகே நண்பரை கொன்றவரை பழிக்குப்பழியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
காரைக்குடி,
குன்றக்குடி போலீஸ் சரகம் உ.சிறுவயல் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயராமன் (வயது 25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவரும், இவரது நண்பர்களும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். அந்த வழக்கில் ஜெயராமன் முதல் குற்றவாளி ஆவார். அதற்கான வழக்கு தற்போது காரைக்குடி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்காக முருகனின் நண்பர்கள், ஜெயராமனை பழிக்குபழி வாங்குவதற்காக காத்திருந்தனர். இந்தநிலையில் அவர் தனது வீட்டிலிருந்து கீழச்சிவல்பட்டிக்கு மோட்டார்சைக்கிளில் உறவினரோடு சென்றார். ஓடுபாலம் அருகே சென்ற போது, கொலை செய்யப்பட்ட முருகனின் நண்பர்கள் கும்பல், ஜெயராமனை வழிமறித்து சரமாரியாக வெட்டினர்.
இதில் ஜெயராமன் தலை உள்பட உடலின் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்ததில், அவர் மயங்கி விழுந்தார். இதைப்பார்த்ததும், வெட்டிய கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்று விட்டது. சிறிது நேரத்தில் அந்த வழியாக வந்தவர்கள் படுகாயமடைந்து கிடந்தவரை காரைக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து காரைக்குடி சத்யா நகரை சேர்ந்த அஜித், பூச்சி என்ற சக்தி, உ.சிறுவயல் பகுதியைச் சேர்ந்த சரண், நந்தகோபால், மற்றும் 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.