ஓட்டுப்போட்டவர்களுக்கு துரோகம் செய்தவர்களுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவேசம்
ஓட்டுப்போட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு 20 கோடி ரூபாய் வாங்கிக்கொண்டு ஓடியவர்களுக்கு இடைத்தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
ராஜபாளையம்,
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் ராஜவர்மன் தலைமையில் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி, மேற்கு ஒன்றிய செயலாளர் தேவதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:–
முதல்–அமைச்சரிடம் பேசி தற்போது பட்டாசு தொழிலாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. வரும் வாரம் நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். தினகரனை அவரது குடும்பத்திலேயே யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. பணம் இருந்தால் பதவி என்பது அவரது கட்சியின் கொள்கை. அவரது கட்சிக்கு பதிவு இல்லை. அது பெயரில்லாத பிள்ளை.
நல்ல மனிதர்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்து விட்டனர். சமுதாயத்தை கூறி எத்தனை நாள் ஏமாற்ற முடியும். அனைத்து சமுதாய மக்களையும் அரவணைத்து சென்றவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அந்த சமுதாயத்திற்கு தினகரன் என்ன செய்தார்.
தினகரன் அணி ஒரு பட்டமரம். அதில் இனி பால் வராது. கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் வியர்வை சிந்தி, ரத்தத்தை சிந்தி உழைப்பை கொடுத்து இந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வை தேர்ந்தெடுத்தனர். ஆனால் இந்த தொகுதி எம்.எல்.ஏ. தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாமல் ஓட்டுப்போட்ட மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு ஓடிவிட்டார். ரூ.20 கோடி வாங்கிக்கொண்டு ஓடியவர்களுக்கு இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
இவ்வாறு பேசினார்.