சிவகங்கை தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை அமைச்சர் பாஸ்கரன் தகவல்

சிவகங்கை தெப்பகுளத்தை ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.

Update: 2019-03-04 22:30 GMT

சிவகங்கை,

சிவகங்கை நகரின் மையத்தில் புகழ் பெற்ற தெப்பகுளம் உள்ளது. சிவகங்கை நகரம் அமைக்கப்படும் போது, முதன் முதலில் இந்த தெப்பகுளமும், அதையொட்டி அரண்மனையும் அமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த தெப்பக்குளத்தில் எப்போதும் தண்ணீர் நிறைந்து இருக்கும். இந்தநிலையில் கடந்த கடந்த 4 வருடமாக தெப்பக்குளம் வறண்டு கிடக்கிறது.

இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாஸ்கரன் மற்றும் கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் ஏற்பாட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரியாற்று தண்ணீர் மூலம் தெப்பக்குளம் நிரப்பப்பட்டது. மேலும் இந்த தெப்பக்குளத்திற்கு நிரந்தமாக தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டரிடம், அமைச்சர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து கலெக்டரின் விருப்ப உரிமை நிதியில் இருந்து ரூ.5லட்சம் மதிப்பில் தெப்பகுளத்தின் அருகில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. இந்த ஆழ்துளை கிணறுகளை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர். பின்னர் இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:– தெப்பகுளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கிடைக்கும் வகையிலும், தற்போது உள்ள தண்ணீரின் அளவு குறையாமல் இருக்கவும் தெப்பகுளத்தின் அருகில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள தண்ணீர் தெப்பகுளத்திற்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது தெப்பக்குளத்தில் உள்ள நீர்மட்டம் குறையாமல் அப்படியே இருக்கும். மேலும் ஆழ்துளை கிணறு மூலம் தண்ணீர் நிரப்பும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. மேலும் தெப்பகுளத்திற்குள் குப்பைகள் போடுவதை தடுக்க, கைப்பிடி சுவருக்கு மேலே தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்