4–வது குடிநீர் திட்டத்தின் மூலமாக பொங்குபாளையம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

4–வது குடிநீர் திட்டத்தின் மூலமாக பொங்குபாளையம் பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2019-03-04 22:19 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தின் சார்பில் அளித்த மனுவில், திருப்பூர் ஆண்டிப்பாளையத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பொதுமக்கள், விவசாயிகள் தங்கள் நகைகளை வைத்து பயிர்க்கடன் பெற்று வருகிறார்கள். இந்த சங்கத்தில் நகைகளை பாதுகாப்பாக வைக்கும் வகையில் பாதுகாப்பு பெட்டக வசதி செய்து கொடுக்க வேண்டும். மங்கலத்தில் உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மின்வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால் இடம் கிடைக்காமல் உள்ளனர். மங்கலம் கால்நடைத்துறை மருத்துவமனை வளாகத்தில் உதவி மின் செயற்பொறியாளர் அலுவலகம் கட்டலாம். இதற்கு உரிய அனுமதி கொடுக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க அந்தந்த கூட்டுறவு வங்கி மூலமாக கடன் உதவி வழங்கப்பட்டது. அதில் அரசு மானியத்தொகை அந்த பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மானியத்தொகை வழங்கப்படவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பொங்குபாளையம் ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் அப்புசாமி மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், திருப்பூர் ஒன்றியம் பொங்குபாளையம் ஊராட்சி தற்போது விரிவடைந்துள்ளது. இங்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். 2–வது குடிநீர் திட்டத்தின் மூலமாக ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. தற்போது வசிப்பவர்களுக்கு குடிநீர் வசதி கிடைக்கும் வகையில், புதிதாக செயல்படுத்தப்பட உள்ள 4–வது குடிநீர் திட்டத்தின் மூலமாக பொங்குபாளையத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலமட்ட தொட்டி கட்டி, குடிநீரை தேக்கி அங்கிருந்து வீடுகளுக்கு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பல்லடம் அல்லாளபுரம், லட்சுமி நகர், கரைப்புதூர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், அல்லாளபுரத்தில் உண்ணாமலையம்மன், உலகேஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. சிலர் பெயர் மாற்றம் செய்து விற்பனை செய்து இருக்கிறார்கள். கோவில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த சிவகாமி அளித்த மனுவில், நான் அறிவொளிநகர் அங்கன்வாடி மைய உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். நான் கொடுக்கவில்லை. இந்த நிலையில் கரைப்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெற்றுக்கொண்டு வேலை வழங்கியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பெருமாநல்லூர் அருகே காளம்பாளையம் ஸ்ரீசிவசக்தி நகரை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில், நாங்கள் கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு மேற்கண்ட இடத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். எங்கள் இடத்துக்கு செல்ல வழித்தடம் இருந்தது. இந்த நிலையில் எங்கள் இடத்துக்கு அருகில் உள்ள நில உரிமையாளர் எங்கள் வழித்தடத்தை அடைத்து கம்பிவேலி போட முயன்றார். நாங்கள் தடுத்து நிறுத்தினோம். சம்பந்தப்பட்ட இடம் தனக்கு சொந்தமானது என்று அவர் கூறியுள்ளார். நாங்கள் நிலம் வாங்கிய உரிமையாளரிடம் கேட்டால் உரிய பதில் தெரிவிக்கவில்லை. எனவே எங்களுக்கு வழித்தட வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்