பாசனத்துக்காக அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை திறப்பு

அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

Update: 2019-03-04 22:30 GMT
அந்தியூர்,

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வரட்டுப்பள்ளம் அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 33.33 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக கல்லுப்பள்ளம், வரட்டுப்பள்ளம், கும்பிரவாணிப்பள்ளம் ஆகியவை உள்ளன. தற்போது அணையின் நீர்மட்டம் 28 அடியாக உள்ளது.

இந்த நிலையில் வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்காக 4-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் அந்தியூர் இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மதகை திருகி தண்ணீரை திறந்து விட்டார். அப்போது அணையில் இருந்து தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. உடனே அங்கு நின்று கொண்டிருந்த விவசாயிகள் தண்ணீர் மீது மலர்கள் தூவி வரவேற்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தற்போது அணையில் 28 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து இன்று (அதாவது நேற்று) முதல் ஏப்ரல் மாதம் 22-ந் தேதி வரை மொத்தம் 49 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இந்த தண்ணீர் மூலம் 2 ஆயிரத்து 924 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, எள், பருத்தி போன்ற பயிர்களை பயிரிடலாம்,’ என்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர்கள் மீனாட்சி சுந்தரம், பாலுச்சாமி, சண்முகானந்தம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்