கோத்தகிரி அருகே, கரடி தாக்கி தொழிலாளி படுகாயம்
கோத்தகிரி அருகே கரடி தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
கோத்தகிரி,
கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் புதுகாலனியை சேர்ந்தவர் பத்ரன்(வயது 25). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சோலூர்மட்டம் பஜாருக்கு சென்றுவிட்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையோர புதர் மறைவில் இருந்து 2 குட்டிகளுடன் கரடி ஒன்று வெளியே வந்தது. இதை பார்த்த பத்ரன் பீதியடைந்து, அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தார். இருப்பினும் அந்த கரடி பத்ரனை தாக்கிவிட்டு, குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. படுகாயம் அடைந்த பத்ரன் வலியால் அலறித்துடித்தார். சத்தம் கேட்டு அங்கு பொதுமக்கள் திரண்டு வந்தனர். தொடர்ந்து அவரை மீட்டு கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கரடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையை பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்குநாள் கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் கூலி வேலைக்கு வெளியிடங்களுக்கு செல்லும் தொழிலாளர்கள் நிம்மதியாக வீடு திரும்ப முடியவில்லை. மேலும் மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வரை பெற்றோர் அச்சத்தில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே கரடிகள் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.