மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 7 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

Update: 2019-03-04 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து 16 மனுக்களும், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 386 மனுக்கள் என மொத்தம் 402 மனுக்களும் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது ஒருவார காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து வேதாரண்யம் வட்டம், தகட்டூர் அரைக்கால் கரை பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்பவருக்கு தேங்காய் வியாபாரம் செய்ய மாவட்ட கலெக்டரின் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.20 ஆயிரம் நிதி உதவியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 368 மதிப்பிலான காதொலிக் கருவிகளையும், தாட்கோ நிறுவனம் சார்பில் சுயதொழில் செய்ய அரசு மானியத்துடன் வங்கிக் கடன் உதவியுடன் ரூ.4 லட்சத்து 33 ஆயிரத்து 301 மதிப்பிலான சரக்கு வேன் உள்பட 7 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.6 லட்சத்து 16 ஆயிரத்து 669 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

இதில் உதவி கலெக்டர் (சமூகப்பாதுகாப்புத் திட்டம்) வேலுமணி, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் விக்டர் மரிய ஜோசப், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் செல்வகுமார் உள்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்