சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம்: உமேஷ்ஜாதவ் எம்.எல்.ஏ., காங்கிரசின் முதுகில் குத்திவிட்டார் தினேஷ் குண்டுராவ் குற்றச்சாட்டு
சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்திருப்பதன் மூலம், உமேஷ்ஜாதவ் காங்கிரசின் முதுகில் குத்திவிட்டார் என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.;
பெங்களூரு,
மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கட்சியில் இருந்து கொண்டு, ஏமாற்றுவது, மோசடி செய்வதை விட எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்வது நல்லது. உமேஷ்ஜாதவுக்கு 2 முறை காங்கிரஸ் டிக்கெட் வழங்கியது. அவர் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவருக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவருக்கு காங்கிரஸ் அனைத்து பதவிகளையும் வழங்கி நல்ல தலைவராக வளர்த்துவிட்டது. இதையெல்லாம் மறந்து, அவர் காங்கிரசின் முதுகில் குத்திவிட்டார்.
உள்ளூர் மட்டத்தில் உள்ள அரசியல் பிரச்சினையால் நான் பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று அவர் காரணம் கூறி இருக்கிறார். உள்ளூர் அரசியல் பிரச்சினை என்றால், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை தான் வரும். அவர் கூறிய காரணம் பொய்.
உமேஷ்ஜாதவ் வெளிப்படையாக பேச வேண்டும். அவர் விலைபோன பொருள். பா.ஜனதாவில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இந்த உண்மையை அவர் சொல்ல வேண்டும். இதுவரை அவர் மீது மரியாதை இருந்தது.
மல்லிகார்ஜுன கார்கே பற்றி குறை கூறி பேசும் அளவுக்கு உமேஷ் ஜாதவ் பெரிய தலைவர் இல்லை. விளம்பரத்தை விரும்பாமல் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் பாடுபட்டவர் மல்லிகார்ஜுன கார்கே. நேர்மையான அரசியல்வாதி.
அவரை பற்றி தரக்குறைவாக பேசுவது சரியல்ல. உமேஷ்ஜாதவ் மட்டுமின்றி துரோகம் செய்யும் மனநிலையில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சியை விட்டு வெளியே செல்லலாம். இத்தகையவர்கள் வெளியே போனால்தான் கட்சி மேலும் பலம் அடையும்.
தலைவர்கள் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால் கட்சி நிரந்தரமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் உமேஷ்ஜாதவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.