காவல்துறை நிர்வாகவியல் டிப்ளமோ படிப்பு
காவல்துறையில் குற்றவியல், நுண்ணறிவு, தடயவியல் சார்ந்த பிரிவுகளில் பணிபுரிய ஏற்ற பல்வேறு வகை படிப்புகள் உள்ளன. அவற்றில் காவல்துறை நிர்வாகம் பற்றிய குறுகிய கால டிப்ளமோ படிப்பு அதிகப்படியான வேலைவாய்ப்புகளைக் கொண்டதாகும்.;
மத்திய மாநில அரசுகளின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகத்துறையில் மாநகரங்கள், நகரங்கள், கிராமப்புறங்களில் பணிபுரிய இந்த படிப்பு கைகொடுக்கும். காவல்துறை நிர்வாகம் (போலீஸ் அட்மினிஸ்ட்ரேசன்) படிப்பை பற்றியும், அதன் மூலம் கிடைக்கும் பிரகாசமான வாய்ப்புகள் பற்றியும் பார்ப்போம்...
நாட்டின் உள்விவகார சட்டம் ஒழுங்கில் காவல்துறையின் பங்களிப்பு மகத்தானது. நேரம்- காலம் கருதாது பணியாற்றும் காவல்துறையின் சேவைப்பணி மதிப்புக்குரியதாக போற்றப்படுகிறது. சிறுநகரங்கள் முதல் பெரு நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் அதிகமான எண்ணிக்கையில் காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள அலுவலக பணிகளை ஒருங்கிணைத்து செய்வது பற்றிய கல்வியே காவல்துறை நிர்வாகவியல் படிப்பாகும்.
அலுவல் நிர்வாகம் மட்டுமல்லாது உளவியல், புலன்விசாரணை நுட்பம், அதற்கான தொழில்நுட்பங்கள், தேசிய சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், திட்டப்பணிகள், குற்றவியல் காவல் நிர்வாகம், ஆய்வு முறைகள் ஆகியவறை பற்றிய பாடத்திட்டங்கள் இந்த கல்வியில் இடம் பெறும். டிப்ளமோ படிப்பில் இவை பற்றிய அடிப்படை விஷயங்களும், பட்டப்படிப்பில் இவை பற்றிய விரிவான பாடத்திட்டங்களும் இடம் பெறும்.
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்கள் காவல்துறை நிர்வாக டிப்ளமோ படிப்பு படிக்க முடியும். இந்த படிப்பை படிக்க காவல்துறை சார்ந்த ஆர்வம் இருப்பதுடன், அதற்கேற்ற உடல் தகுதியும், ஆரோக்கியமும் இருப்பது அவசியமாகும். இது ஓராண்டு கால படிப்பாகும். பல்வேறு பல்கலைக்கழகங்களில் காவல்துறை நிர்வாகம் பற்றிய பட்டப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் உள்ளன. டிப்ளமோ படிப்புகள் குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.
காவல்துறை நிர்வாகவியல் படித்தவர்கள் மத்திய மாநில அரசுகளின் காவல்துறை பணியிடங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெறலாம். இவர்கள் தனியாக பயிற்சி மையங்கள் தொடங்கி காவலர் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு காவல்துறை நிர்வாகம் பற்றிய பயிற்சி வழங்கவும் முடியும்.
பல்வேறு மாநில காவல்துறைகளிலும், பிராந்திய ராணுவ பிரிவிலும் இந்த படிப்பை படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. துணை ராணுவ பிரிவுகளான பி.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., ஐ.டி.பி.பி., சி.ஆர்.பி.எப், சி.ஐ.எஸ்.எப். ஆகியவற்றிலும் வேலைவாய்ப்பு பெறலாம்.
குற்றவியல் நீதித்துறை, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகத்துறை, குடியேற்றம் கண்காணிப்பு பிாிவு, காவல்துறை துப்பறியும் பிரிவு, குற்றவியல் ஆய்வுப் பிரிவு, தீயணைப்பு பிரிவு, குற்றத்தடுப்புத் துறை, தனியாா் துப்பறியும் அமைப்புகள், போக்குவரத்து காவல்துறை ஆகியவற்றிலும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
குற்றவியல் ஆய்வக ஆய்வாளர், போக்குவரத்து ஆய்வாளர், கான்ஸ்டபிள் முதல் டிஜி.பி. வரையிலான பதவிகள், போதை பொருள் தடுப்பு அதிகாரி, குடியேற்ற ஆய்வாளர், துப்பறியும் ஆய்வாளர், துப்பறியும் நிபுணர், புலன்விசாரணை அதிகாரி, ஐ.பி.எஸ். போன்ற பல்வேறு பணிகளில், இந்த படிப்புகளை படித்தவர்கள் பணி நியமனம் பெறலாம். எளிதில் வேலைவாய்ப்பு மற்றும் பிரகாசமான வாய்ப்புகள் கொண்ட கல்வியை தேர்வு செய்ய காத்திருப்பவர்கள் போலீஸ் அட்மினிஸ்ட்ரேசன் படிப்பை பரி சீலிக்கலாம்.