மாணவர்களை அரசு பள்ளிகளுக்கு ஈர்க்கும் மேம்பாட்டு நடவடிக்கைகள்

தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் படையெடுப்பதை தடுத்து, அரசு பள்ளிகளுக்கு அவர்களை வரவழைக்கும் விதமாக தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை சமீபகாலமாக எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Update: 2019-03-04 11:46 GMT
பள்ளி முன்பருவ வகுப்புகளான எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இதுவரை அரசு பள்ளிகளில் கிடையாது. இந்த குறையை போக்கும் விதமாக வரும் கல்வி ஆண்டில் இருந்து ஆயிரக்கணக்கான அங்கன்வாடி மையங்களுடன் இணைந்த பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகள் பல, தங்கள் பள்ளியில் நவீன தொழில்நுட்பத்துடன் ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படுவதாக விளம்பரம் செய்கின்றன. இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் அரசு பள்ளிகளிலும் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 6 ஆயிரம் பள்ளிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக சமீபத்தில் கல்வித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்தார். மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் இணைய இணைப்பு வசதிக்கு உள்ளாக்கப் படுகிறது என்றும் அவர் கூறி உள்ளார்.

மத்திய அரசு 2 ஆண்டுகளுக்கு முன்பு, நீட் தேர்வை அறிமுகம் செய்தபோது, தமிழக மாணவர்கள் மத்தியில் அது குறித்த பதற்றம் நிலவியது, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுவதை முறியடிக்கும் வகையில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து தமிழகம் முழுவதும் 400க்கும் மேற்பட்ட மையங்களில் விடுமுறை நாட்களில் நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் பயனாக கடந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்தது. இதில் அரசுப் பள்ளி மாணவர்களும் நல்ல தேர்ச்சி விகிதம் பெற்றனர். நீட் பயிற்சிபோல கணக்குத் தணிக்கையாளர் தேர்வை எதிர்கொள்வதற்கான பயிற்சியும் அரசு நடத்துவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மாணவர்கள் அதிகப்படியான பாடச்சுமையால் மனச்சோர்வு அடைவதை தடுக்கும் வகையிலும், விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து மாணவர்களின் உடல் மற்றும் மன வலிமையை வளப்படுத்தும் வகையிலும் அரசுப் பள்ளிகளில் தினசரி கூடுதல் விளையாட்டு வகுப்பை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இது வழக்கமான விளையாட்டு வகுப்புகள் தவிர்த்த தினசரி கூடுதல் வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 8,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தமிழக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழக அரசு பள்ளிகளில், மதிய உணவு திட்டம் முதல், சீருடை,புத்தகப்பை, சைக்கிள், கல்வி உதவித் தொகை உள்ளிட பல்வேறு சிறப்பு சலுகைத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பள்ளிக்கல்வி, பட்டப்படிப்பை முடிக்கும் பெண்களுக்கு திருமண உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இவற்றில் பல திட்டங்கள் இந்தியாவில் பிற மாநிலங்களில் இல்லாத முன்னோடி திட்டங்களாக செயல்படுத்தப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இதுபோன்ற நடவடிக்கைகளால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றும் அடுத்த கல்வி ஆண்டில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்வார்கள் என்றும் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் நிருபா்கள் சந்திப்பில் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்