ஒட்டக இறைச்சி விற்பனைக்கு உடந்தை: இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் வடகிழக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. மனீஷ் கர்பீகர் உத்தரவு
கலபுரகியில்,ஒட்டக இறைச்சி விற்பனைக்கு உடந்தையாக இருந்த இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீஸ்காரர்களை பணி இடைநீக்கம் செய்து வடகிழக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. மனீஷ் கர்பீகர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
கலபுரகி (மாவட்டம்) புறநகர் பகுதிகளில் விதி முறைகளை மீறி ஒட்டங்களின் இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக ஆந்திராவை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனத்திற்கு தெரியவந்தது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து லாரிகளில் ஒட்டகங்களை கலபுரகிக்கு கடத்தி வந்து, அந்த ஒட்டங்களை கலபுரகி புறநகர் பகுதியில் வைத்து கொன்று, அதன் இறைச்சியை எம்.பி.நகர், கமலாநகர், யுனிவர்சிட்டி ஆகிய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதையும் அந்த தொண்டு நிறுவனத்தினர் கண்டுபிடித்திருந்தனர்.
இதையடுத்து, விதிமுறைகளை மீறி ஒட்டக இறைச்சி விற்கப்படுவதாக கூறி எம்.பி.நகர் போலீஸ் நிலையத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தினர் புகார் அளித்தனர். ஆனால் அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வாஜித் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் ஒட்டக இறைச்சி விற்பனை நடைபெறுவதை தடுக்க எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி மத்திய மந்திரி மேனகா காந்தியின் கவனத்திற்கு தனியார் தொண்டு நிறுவனத்தினர் கொண்டு சென்றனர்.
இதையடுத்து, கலபுரகியில் ஒட்டக இறைச்சி விற்பனை செய்யப்படுவது தொடர்பாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவோ, வழக்குப்பதிவு செய்யவோ மறுப்பதாகவும், அதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரியும் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜுவுக்கு மத்திய மந்திரி மேனகா காந்தி கடிதம் எழுதி இருந்தார். உடனே விதிமுறைகளை மீறி ஒட்டக இறைச்சி விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீதும், அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி வடகிழக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. மனீஷ் கர்பீகருக்கு, டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவிட்டார்.
அதன்பேரில், போலீஸ் ஐ.ஜி. மனீஷ் கர்பீகர் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். அப்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கலபுரகி புறநகர் பகுதிக்கு ஒட்டகங்கள் கடத்தி வரப்படுவதும், அங்கு அந்த ஒட்டகங்களை கொன்று இறைச்சியை விற்று வந்ததும், அதுபற்றி தெரிந்திருந்தும் ஒட்டக இறைச்சி விற்பனையில் ஈடுபடும் கும்பலுக்கு எம்.பி.நகர் போலீசார் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், ஒட்டக இறைச்சி விற்பனையில் ஈடுபடும் கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாக கூறி எம்.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாஜித், சப்-இன்ஸ்பெக்டர் தொட்டமணி, போலீஸ்காரர்கள் மல்லிகார்ஜுன், மஞ்சுநாத், ஸ்ரீசைல் ஆகிய 5 பேரையும் பணி இடைநீக்கம் செய்து போலீஸ் ஐ.ஜி. மனீஷ் கர்பீகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவத்தில் மேலும் சில போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. மேலும் தனியார் தொண்டு நிறுவனத்தினர் கொடுத்த புகாரின் பேரில் எம்.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒட்டக இறைச்சி விற்பனையில் ஈடுபடும் கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.