மேச்சேரி அருகே கார் மோதி கர்ப்பிணி, பள்ளி மாணவர் பலி டிரைவரை கைது செய்யக்கோரி சாலைமறியல்
மேச்சேரி அருகே தறிக்கெட்டு ஓடிய கார் மோதி கர்ப்பிணி, பள்ளி மாணவர் பலியானார்கள். விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரை கைது செய்ய கோரி அந்த பகுதி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.;
மேச்சேரி,
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே நங்கவள்ளியில் இருந்து தாரமங்கலம் நோக்கி ஒரு கார் நேற்று இரவு 8.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அந்த கார் பெரியசோரகை அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் அந்த கார் ரோட்டோரம் இருந்த டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த மணிமேகலை (வயது 28), கமல்ராஜ் (15) ஆகியோர் மீது பயங்கரமாக மோதி விட்டு டீக்கடைக்குள் புகுந்தது. உடனே காரில் இருந்த டிரைவரும், அதில் வந்தவர்களும் காரை விட்டு இறங்கி அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த விபத்தை பார்த்ததும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு ஓடி வந்தனர். அங்கு விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மணிமேகலை, கமல்ராஜ் ஆகிய இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
பின்னர் பெரியசோரகை பஸ் நிலையத்தில் அந்த பகுதி பொதுமக்கள் திரண்டு விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடியவர்களை கைது செய்ய கோரி நங்கவள்ளி- தாரமங்கலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மேச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடையாத பொதுமக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு மறியலை தொடர்ந்தனர்.
இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். விபத்தில் பலியான மணிமேகலை 8 மாத கர்ப்பிணி என்பதும், கமல்ராஜ் அங்குள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. கார் விபத்தில் கர்ப்பிணி, பள்ளி மாணவர் பலியான சம்பவம் பெரியசோரகை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.