ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமான பணி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
ஸ்ரீவில்லிபுத்தூரில் வட்டார போக்குவரத்து அலுவலக கட்டுமான பணியையும் அருப்புக்கோட்டையில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டுமான பணியையும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் அருகில் வட்டார போக்குவரத்து புதிய அலுவலகம் கட்டும் பணிக்கு சந்திரபிரபா எம்.எல்.ஏ. முன்னிலையில், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்.
நவீன வசதிகளுடன் 4 ஏக்கர் பரப்பளவில் ரூ.3½ கோடி மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டப்படவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில், விருது நகர் சரக துணை போக்குவரத்து ஆணையர் வெங்கட்ராமன், ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் ரவிச்சந்திரன், உதவி செயற்பொறியாளர் அய்யாச்சாமி, வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் அ.தி.மு.க. மகளிர் அணி துணை செயலாளர் மீராதனலட்சுமிமுருகன், நகர செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், ஒன்றிய செயலாளர் மயில்சாமி, வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் சுப்புராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் எதிரே சுமார் ரூ.1½ கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் புதிய அலுவலகம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். துணை போக்குவரத்து ஆணையர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி புதிய அலுவலகத்திற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சங்கரலிங்கம், நகர செயலாளர் கண்ணன், பேரவை செயலாளர் சக்திவேல், முன்னாள் ஒன்றிய செயலாளர் கொப்பையராஜ், ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராம்பாண்டியன், பஸ் உரிமையாளர்கள் மகாலிங்கம், சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு அனுமதி அளித்த நிலையில் நேற்று காலை புதிய கட்டிடத்துக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் தலைமை தாங்கினார். சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் முன்னிலை வகித்தார். சிவகாசி நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சங்கீதா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ.88 லட்சத்து 61 ஆயிரம் செலவில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். பின்னர் சிவகாசி- ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் போலீஸ் மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் ரூ.71 லட்சத்து 32 ஆயிரம் செலவில் கட்டப்பட உள்ள நிலையில் இதற்கான பணியை தொடங்கி வைத்தார். முடிவில் இன்ஸ்பெக்டர் கண்ணாத்தாள் நன்றி கூறினார். திருத்தங்கல் நகர அ.தி.மு.க. செயலாளர் பொன்சக்திவேல், மாவட்ட எம்.ஜி.ஆர்.இளைஞரணி செயலாளர் மல்லி ராஜவர்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.