காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தல்
காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தினார்.
ராமநாதபுரம்,
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் முல்லை– பெரியாறு முதல் தஞ்சாவூர் வரை பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் கடுமையான வறட்சியை சந்தித்திருக்கிறது. இந்த மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்து வறட்சி நிவாரண பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும். வைகையில் மணல் கொள்ளை தீவிரமடைந்திருக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும். காவிரி–வைகை–குண்டாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக தமிழக அரசு தொடங்க வேண்டும். காவிரியில் மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய அரசாங்கம் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே அனுமதி வழங்கக் கூடிய பேரதிர்ச்சி செய்தி வந்திருக்கிறது.
அதை மத்திய அரசாங்கம் கைவிட வேண்டும். முல்லைப் பெரியாறு அணையில் நீரை 152 அடி உயர்த்த மத்திய அரசாங்கத்தின் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி விவசாயிகளை பாதுகாப்பதற்காக அனைத்து கோரிக்கைகளையும் முன்வைத்து இந்த பிரசார பயணத்தை தொடங்கி இருக்கிறோம்.
2017–18–ம் ஆண்டு பயிர் காப்பீட்டு நிவாரண தொகையை அரசு வழங்கிய பின்பும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்காமல் தாமதம் செய்து வருகிறது. அதனை முறைகேடு இல்லாமல் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த அடிப்படையில் மோடியோடு கூட்டணி போட்டு இருக்கிறார். இந்த கூட்டணி என்பது தமிழக மக்களுக்கு எதிரான கூட்டணி என்பதை எடப்பாடி பழனிசாமி உணர்ந்து இந்த கூட்டணி குறித்து அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஐந்தாண்டு காலம் விவசாயிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களைச் சொல்லி தமிழக விவசாயிகள் மட்டுமல்ல இந்திய விவசாயிகளும் போராட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். உயிர்கள் மடிந்து கொண்டே இருக்கின்றன. கடனை தள்ளுபடி செய்ய மாட்டேன், லாபகரமான விலை நிர்ணயம் செய்ய மாட்டேன், விவசாயிகளுக்கு இலவசம் வழங்க மாட்டேன் என்று மறுத்து வந்த மோடி தமிழக விவசாயிகளிடம் வாக்கு கேட்க வருகிறார். வேதனையாக இருக்கிறது. தற்போது மேற்கொண்டுள்ள பிரசாரம் பயணம்மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிரான பயணம் நாடாளுமன்ற களத்தில் மோடி வருவதற்கு எதிரான பயணம். இவ்வாறு அவர் கூறினார்.