பாரடைஸ் பீச்சில் மகள்களை கிண்டல் செய்ததை தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல் வங்கி ஊழியர்கள் 2 பேர் கைது

பாரடைஸ் பீச்சில் மகள்களை கிண்டல் செய்தவர்களை தட்டிக்கேட்ட தாய் தாக்கப்பட்டார். இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-03-03 22:30 GMT

பாகூர்,

புதுவை வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் ஜக்காரியா. இவரது மனைவி பஷிராபேகம் (வயது 40). இவர் நேற்று முன்தினம் தனது 2 மகள்கள் மற்றும் உறவினர்களுடன் நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சுக்கு சென்றார். அங்கு அவர்கள் பேரும் கடலில் இறங்கி குளித்தனர்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த 2 வாலிபர்கள் பஷிராபேகத்தின் மகள்களான இளம்பெண்களை கிண்டல் செய்தனர். இதை தட்டிக்கேட்ட பஷிராபேகத்தை அந்த வாலிபர்கள் திட்டி, தாக்கியதாக கூறப்படுகிறது.

அப்போது பீச்சில் ரோந்து சென்ற தவளக்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டனிடம் பஷிராபேகம் புகார் கூறினார். இதையடுத்து அந்த வாலிபர்களை தவளக்குப்பம் போலீஸ் நிலையம் அழைத்துவந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை சேர்ந்த பாண்டியன் (29), பிரான்சிஸ் (29) என்பதும், அங்குள்ள தனியார் வங்கியில் ஊழியர்களாக வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

அரியாங்குப்பம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் மணவெளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 2 வாலிபர்கள் அப்பகுதியில் நின்றுகொண்டு அந்த வழியாக சென்ற பெண்களை கிண்டல் செய்துகொண்டு இருந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்தனர்.

விசாரணையில் மணவெளி கலைஞர் நகரை சேர்ந்த அய்யனார் (26), மணிகண்டன் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்