கள்ளக்காதலியுடன் தகராறு, கழுத்தை அறுத்து போலீஸ் ஏட்டு தற்கொலை முயற்சி
கள்ளக்காதலியுடன் ஏற்பட்ட தகராறில், கழுத்தை அறுத்து போலீஸ் ஏட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொடைரோடு,
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 44). இவர், நாகபட்டினம் மாவட்டம் நாகூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி குருஷ்கயா (37).
இவர், சமயநல்லூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கின்றனர். 2 குழந்தைகளும் குருஷ்கயாவுடன் வசிக்கின்றனர்.
திண்டுக்கல் பிள்ளையார்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன். அவருடைய மனைவி மகாலட்சுமி. இவர், மதுரை மாவட்ட கோர்ட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், விக்னேஷ்வரனுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பிரிந்து வாழ்கின்றனர். இந்த தம்பதிக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
பணி நிமித்தமாக முருகன் கோர்ட்டுக்கு சென்று வந்தார். அப்போது முருகனுக்கும், மகாலட்சுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதனால் முருகன் அவ்வப்போது திண்டுக்கல் வந்து சென்றார். அதன்படி நேற்று முன்தினம் முருகன் திண்டுக்கல் வந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மகாலட்சுமியுடன் அவர் தகராறில் ஈடுபட்டார். இதனால் முருகனை, நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டில் விடுவதற்கு மகாலட்சுமி முடிவு செய்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஒரு காரில் முருகனும், மகாலட்சுமியும் மதுரை நோக்கி புறப்பட்டனர்.
காரில் ஏறியது முதல் மீண்டும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டது. திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு சுங்கவரி வசூல் மையம் அருகே கார் வந்தது. அப்போது, டீ குடிப்பதற்காக காரை நிறுத்துமாறு டிரைவரிடம் முருகன் கூறினார். இதனையடுத்து டிரைவர் காரை நிறுத்தி விட்டு டீ வாங்குவதற்காக கடைக்கு சென்றார்.
இதேபோல் அங்குள்ள ஒரு கடைக்கு சென்ற முருகன், ஒரு கத்தியை வாங்கி விட்டு மீண்டும் காருக்குள் வந்தார். காரில் இருந்த மகாலட்சுமியுடன் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதில் மனம் உடைந்த அவர், தான் வைத்திருந்த கத்தியால் திடீரென கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனை கண்ட மகாலட்சுமி அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன், முருகனை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மகாலட்சுமி சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.