ஆன்-லைன் மூலம் மணல் பதிவு செய்வதை ரத்து செய்யக்கோரி சீர்காழியில் கடையடைப்பு-ஆர்ப்பாட்டம்

ஆன்-லைன் மூலம் மணல் பதிவு செய்வதை ரத்து செய்யக்கோரி சீர்காழியில் ஆர்ப்பாட்டம்- கடையடைப்பு நடத்தப்படும் என்று கட்டிட பொறியாளர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2019-03-03 22:45 GMT
சீர்காழி,

சீர்காழியில், கட்டிட பொறியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் பால்ராஜ் ரெத்தினம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, நடராஜன், கார்த்திக், சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். இதில் சீர்காழி வர்த்தக நல சங்க தலைவர் குமார், வர்த்தக சங்க பொதுச் செயலாளர் துரை, கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் ஆகியோர் மணல் தட்டுப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் கட்டுமான பணி பாதிப்பு குறித்து பேசினர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

தமிழகம் முழுவதும் ஆன்-லைன் மூலம் மணல் பதிவு செய்வதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், மணல் குவாரியில் மணல் எடுக்க அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாட்டுவண்டி, டிராக்டர்கள், லாரிகள் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். சீர்காழி பகுதியில் உடனடியாக கொள்ளிடம் ஆற்றில் அரசு அனுமதியோடு பல்வேறு இடங்களில் மணல் குவாரி திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சீர்காழியில் பேரணி, ஆர்ப்பாட்டம், கடையடைப்பு செய்வது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் டிராக்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் ரமேஷ், லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில், கட்டுமான பொருட்கள் விற்பனையாளர்கள் சங்க தலைவர் பிரகாஷ், கட்டிட தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலியபெருமாள், பாலமுருகன், ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்