தர்மபுரி-மொரப்பூர் இடையே ரூ.358.95 கோடியில் புதிய ரெயில்பாதை அமைக்கும் பணி மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று தொடங்கி வைக்கிறார்
தர்மபுரி-மொரப்பூர் இடையே ரூ.358.95 கோடி மதிப்பில் புதிய ரெயில்பாதை அமைக்கும் பணியை மத்திய மந்திரி பியூஸ் கோயல் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தர்மபுரி-மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தூரம் புதிய ரெயில் பாதை அமைக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தார். இதையடுத்து இந்த திட்டத்திற்கு ரூ.358.95 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை 100 சதவீதம் ரெயில்வே துறை செலவில் மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு தர்மபுரி வள்ளலார் திடலில் நடக்கிறது. இந்த விழாவிற்கு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தலைமை தாங்குகிறார். மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். விழாவில் மத்திய ரெயில்வே மற்றும் நிலக்கரி துறை மந்திரி பியுஸ் கோயல் கலந்து கொண்டு புதிய ரெயில்பாதை இணைக்கும் பணிக்கான திட்டத்தை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் தாம்பரம்-திருநெல்வேலி இடையேயான அந்த்யோதயா தினசரி விரைவு ரெயிலை நாகர்கோவில் சந்திப்பு வரை நீட்டிப்பு விழா மற்றும் சென்னை எழும்பூர்-கொல்லம் இடையே தினசரி விரைவு ரெயில் இயக்கப்படுதவதற்கான தொடக்க விழாவும் நடக்கிறது. இந்த ரெயில்களை மத்திய மந்திரி பியூஸ் கோயல் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ரெயில்வே துறை அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.