எந்த வகை பால் நல்லது?
முழு கிரீம் மில்க், ஸ்கீம்டு மில்க், டபுள் டோண்ட் மில்க் போன்ற பல்வேறு தரங்களில் பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
முழு கிரீம் மில்க், ஸ்கீம்டு மில்க், டபுள் டோண்ட் மில்க் போன்ற பல்வேறு தரங்களில் பால் பதப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் சரியான பாலை தேர்ந்தெடுத்து பருகுவதன் மூலம் ஆரோக்கியமான நன்மைகளை பெறலாம்.
‘புல் கிரீம் மில்க்’ பாலில் கிரீம் முழுவதும் நீக்கப்படாமல் இருக்கும். கொழுப்பும் 3.5 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும். உடல் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும். மூளையின் வளர்ச்சிக்கு கொழுப்பும் அவசியமானது. வைட்டமின் டி, ஏ, பி1, கால்சியம், பாஸ்பரஸ், ரிபோபிளேவின் போன்றவையும் அதிகம் கலந்திருக்கும். ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதில் பொட்டாசியத்தின் பங்களிப்பு முக்கியமானது. ரத்த சிவப்பு அணுக்கள், நரம்பு திசுக்களின் ஆரோக்கியத்திற்கு பி.12 உதவுகிறது. வைட்டமின் ஏ, சருமம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்க பயன்படுகிறது. இத்தகைய முழு கிரீம் கலந்த பாலை, சிறுவர்கள், டீன் ஏஜ் பருவத்தினர், கட்டுக்கோப்பாக உடல் எடையை பராமரிப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்கள் பருகலாம்.
ஸ்கீம்டு மில்க் என்பதில் கிரீம் முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கும். கொழுப்பும் 0.1 சதவீதம் அளவிலேயே இருக்கும். முழு கிரீம் பாலுடன் ஒப்பிடுகையில் கலோரியும் பாதி அளவிலேயே இருக்கும். எனினும் புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் ஒரே அளவிலேயே இருக்கும். வைட்டமின் டி அதிக அளவில் இருக்கும். அது கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். நோய் எதிர்ப்பு சக்தியையும் வலுப்படுத்தும். உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவும். எடை இழப்புக்கும் வழிவகுக்கும். சீராக உடல் எடையை பராமரிப்பதற்கும் வழிவகை செய்யும். இதய நோய் அபாயத்தையும் குறைக்கும். இதய நோயாளிகள், நீரிழிவு, உடல் பருமன் பிரச்சினை கொண்டவர்கள், தீக்காயத்தால் அவதிப்படுபவர்கள் இந்த பாலை பருகலாம். அதேவேளையில் சிறுவர்களுக்கு இந்த பால் ஏற்றதல்ல.
டோண்ட் மில்க் என்பது ஒருமுறை கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகும். ‘டபுள் டோண்ட் மில்க்’ என்பது இரண்டு முறை கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகும். எனினும் கொழுப்பு 1.5 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இந்த பாலை ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கொடுக்கக்கூடாது. அதனை பருகுவது உடலை பருமனாக்கும்.
பாலில் இருக்கும் அமினோ அமிலங்கள் திசுக்களின் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு செயல்பாடுகளை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவுகின்றன. தசைகளை வலுப்படுத்துவதற்கு பாலில் கலந்திருக்கும் புரதம் அவசியமானது. 200 மி.லி. அளவு கொண்ட ஒரு டம்ளர் பாலில் 6 முதல் 7 கிராம் வரை புரதம், 200-300 மில்லி கிராம் கால்சியம் உள்ளது. எலும்புகள், பற்களின் வலுவுக்கு கால்சியம் இன்றியமையாதது.