கனவு அரங்கேறும் நேரம்..

இந்திய விமானப்படையில் முதல் பெண் பொறியாளராக தேர்வாகி இருக்கிறார் ஹினா ஜெய்ஸ்வால்.

Update: 2019-03-03 05:37 GMT
ந்திய விமானப்படையில் முதல் பெண் பொறியாளராக தேர்வாகி இருக்கிறார் ஹினா ஜெய்ஸ்வால். இந்திய விமானப் படை பிரிவுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்கும் பைலட்களாக பணிபுரிகிறார்கள்.

விமான பொறியாளர்கள் பிரிவில் ஆண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து பெண் அதிகாரிகளுக்கும் அந்த துறையில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. அந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, கடுமையான பயிற்சிகளை நிறைவு செய்து முதல் பெண் விமான பொறியாளர் மற்றும் விமானப்படை லெப்டினன்ட் அதிகாரியாக சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கிறார் சண்டிகாரைச் சேர்ந்த ஹினா. பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று தேர்ச்சி அடைந்தவர் ஹினா.

கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதியன்று ஹினா, விமானப் படைக்கு தேர்வானார். எலகங்கா விமானப்படைத்தளத்தில் பயிற்சி பெற்றார். பயிற்சியில் திறம்பட செயல்பட்ட அவர், துப்பாக்கி சுடும் பிரிவு ஒன்றுக்கு தலைவியாகவும் இருந்தார். ஏவுகணைகளை வீசும் போர் விமானத்தை வழி நடத்தும் கமாண்டராகவும் சிறப்பாக இயங்கினார். பயிற்சியில் 6 மாத காலம் ஆண்வீரர்களுடன் இணைந்து செயல்பட்டார். அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் பயிற்சியை திறம்பட நிறைவுசெய்தார்.

பயிற்சியை நிறைவு செய்த அவர் இந்திய விமானப்படை பொறியாளர் பிரிவின் முதல் பெண் விமானியாகவும், லெப்டினன்ட் அதிகாரியாகவும் தேர்வு பெற்றார். பாதுகாப்புத்துறை அமைச்சகம், அவர் முதல் பெண் விமானப்படை பொறியாளர் என்பதை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

“விமானப்படையின் முதல் பெண் விமானப் பொறியாளர் என்ற கவுரவம் கிடைத்திருப்பதன் மூலம் எனது சிறுவயது கனவு நிறைவேறி இருக்கிறது. நான் குழந்தையாக இருக்கும்போதே ராணுவவீரர்களின் சீருடையை அணிய வேண்டும் என்றும், விமானியாக வானில் பறக்க வேண்டும் என்றும் கனவு கண்டேன்” என்கிறார்.

விமான பொறியாளரான அவருக்கு, விமானப்படையில் ஹெலிகாப்டர் பிரிவு ஒன்றை இயக்கும் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டது. சியாச்சின் மலைத்தொடரின் உயர்ந்த பனிச்சிகரங்களில் இருந்து அந்தமான் கடல்பகுதிக்கு ஹெலிகாப்டர்களை இயக்கிச்செல்லும் சவாலான பணியைக் கொண்டது இந்த ஹெலிகாப்டர் பிரிவு. “நான் இந்தப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பது ஊக்கம் தருவதாக உள்ளது. சவால்களை எதிர்கொண்டு சேவை செய்து வருகிறேன். விமானப் பொறியாளராக வர விரும்புபவர்கள் விமானங்களை இயக்கத் தெரிந்தவர்களாக இருப்பதுடன், விமானங்கள், விண்கலங்களின் கருவிகள் இயக்கம் பற்றிய தெளிவான அறிவையும் பெற்றிருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

மேலும் செய்திகள்