மும்பை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து நடத்தப்பட்ட தீவிர சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை,
மும்பை சர்வதேச விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 11 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. இதில், மறுமுனையில் பேசிய ஆசாமி விமான நிலைய வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அடுத்த 12 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் குண்டு வெடிக்கும் எனவும் கூறி விட்டு அழைப்பை துண்டித்து விட்டார்.
ஏற்கனவே பாகிஸ்தானுடன் மோதல் பிரச்சினையால் மும்பையில் பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் பதற்றம் அடைந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக இதுபற்றி பாதுகாப்பு படையினருக்கு தெரியப்படுத்தினர்.
இதன்பேரில் பாதுகாப்பு படையினர் வெடி குண்டு நிபுணர்கள், மோப்பநாய்களுடன் விரைந்து வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள விமான நிறுவன ஊழியர்களும், பயணிகளை வரவேற்க வந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் விமான நிலைய வளாகம் உள்பட வாகன நிறுத்தம், பயணிகளின் கழிவறை என அங்குலம் அங்குலமாக தீவிர சோதனை நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நடத்திய தீவிர சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால், அது வெறும் மிரட்டல் என்பது தெரியவந்தது. அதன் பின்னரே பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இது தொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமியை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமான போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.