சிறுமியை கடத்திய 2 பெண்டாட்டிக்காரர் இருதரப்பினர் மோதலில் 3 பேர் காயம்
சேலம் அருகே 2 பெண்டாட்டிக்காரர் சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதையொட்டி இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயம் அடைந்தனர்.;
சேலம்,
சேலம் அருகே உள்ள வீராணம் செங்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் ரவிக்குமார் (வயது 25). கூலித்தொழிலாளி. இவர் முதலில் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து ரவிக்குமாரின் முதல் மனைவி அந்த நபருடன் சென்று விட்டார்.
இதனால் ரவிக்குமார் டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நேரத்தில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை ரவிக்குமார் கடத்தி சென்று விட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செப்டம்பர் மாதம் சிறுமியை மீட்டதுடன், ரவிக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து ரவிக்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையில் அவருடைய 2-வது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவரின் செயலால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா பெற்றோர் வீட்டிலேயே இருந்து வருகிறார். இந்த நிலையில் ரவிக்குமார் கடத்தி சென்ற சிறுமிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க சிறுமியின் குடும்பத்தினர் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் நடக்க இருந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் சிறுமியை மீண்டும் கடத்தி சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியின் குடும்பத்தினர் ரவிக்குமார் வீட்டிற்கு சென்றனர். பின்னர் அங்கிருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் வீட்டின் ஓடு மற்றும் அங்கிருந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் சென்று சிறுமியின் குடும்பத்தினர் ரவிக்குமார் வீட்டில் தகராறு செய்தனர். அப்போது ரவிக்குமாரின் தந்தை பழனிசாமி, இவருடைய உறவினர் மணி ஆகியோரை சிறுமியின் தரப்பினர் தாக்கினர். இதில் 2 பேரின் மண்டை உடைந்தது. மேலும் அவர்கள் திருப்பி தாக்கியதில் சிறுமியின் தந்தையின் மண்டையும் உடைந்தது. காயம் அடைந்த 3 பேரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் பழனிசாமி, மணி, சிறுமியின் தந்தை ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் ரவிக்குமார் மற்றும் சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.