நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி : எடியூரப்பா சொல்கிறார்
நாடாளுமன்ற தேர்தலில் 300 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்றும், நரேந்திர மோடியின் தலைமை நாட்டுக்கு அவசியமானது என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.;
பெங்களூரு,
துமகூருவில் நேற்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா நிருபர்களிடம் கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடக பா.ஜனதா தயாராகி வருகிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவதே பா.ஜனதாவின் ஒரே நோக்கமாகும். அந்த இலக்கை அடைய கடுமையாக உழைத்து வருகிறோம். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் ெவற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை பிடித்திருந்தது. அதுபோல, நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் பா.ஜனதா 300 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிப்பது உறுதி. பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பார். இந்த நாட்டுக்கு நரேந்திர மோடியின் தலைமை அவசியமானதாகும்.
கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் 5 பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். அதனால் இன்னும் ஒரு வாரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து 28 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்-யார்? என்பது குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். வேட்பாளர்கள் தேர்வில் கட்சி மேலிடம் எடுக்கும் முடிவே இறுதியானதாகும்.
நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் போட்டியிட நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா ஆர்வம் காட்டி வருகிறார். சுமலதாவை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சி நடப்பதாகவும், பா.ஜனதா சார்பில் மண்டியா தொகுதியில் சுமலதாவை வேட்பாளராக நிறுத்த முடிவு செய்திருப்பதாகவும் வெளியாகி வரும் தகவல்கள் உண்மையல்ல. அதுபோன்ற முயற்சி எதுவும் நடைபெறவில்லை.
கர்நாடகத்தில் உள்ள 28 தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் போட்டியிடுபவர்களை தேர்வு செய்வது முழுக்க, முழுக்க கட்சி மேலிட தலைவர்கள் தான். அந்த வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வது மட்டுமே என்னுடைய வேலையாகும்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.