‘வளமான மாணவ சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்’ - தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆறுமுகம் பேச்சு

‘வளமான மாணவ சமுதாயத்தை ஆசிரியர்கள் உருவாக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு உடற்கல்வியியல் விளையாட்டு பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆறுமுகம் பேசினார்.

Update: 2019-03-02 23:00 GMT
திருச்செந்தூர்,

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரியின் 18-வது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலையில் நடந்தது. கல்லூரி செயலாளர் சுப்பிரமணியம் தொடக்க உரையாற்றினார். கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ் வரவேற்று பேசினார்.

சென்னை தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 104 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தின் கடைகோடியில் வாழும் ஏழை மாணவர்களும் உயர்கல்வி பெற வேண்டும் என்பதற்காக, ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரியை தொடங்கினார். அவரது வழியில் அவருடைய மைந்தன் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரும், இங்கு அனைத்து துறைகளிலும் மாணவ-மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக, அனைத்து கல்லூரிகளையும் தொடங்கி கல்வித் தொண்டாற்றினார். இங்கு பயின்ற மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளிலும் உயர் பதவிகளில் பணியாற்றி பெருமை சேர்த்து வருகின்றனர்.

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மிகச்சிறந்த சிந்தனையாளராக, கல்வியாளராக, பத்திரிகையாளராக, விளையாட்டு வீரராக, ஆன்மிகவாதியாக, நல்ல நிர்வாகியாக திகழ்ந்து பெருமை சேர்த்தார். அவர் அனைத்து துறைகளில் அளப்பரிய சாதனைகளை படைத்து, பல்வேறு உயர் பதவிகளை ஏற்று திறம்பட பணியாற்றினார்.

உடற்கல்வியியல் படிப்பானது மிகவும் சவால்கள் நிறைந்தது. மேலும் அது நமக்கு அதிக தன்னம்பிக்கை அளிக்க கூடியது. உடற்கல்வியியல் படிப்பின் மூலம் உடல் பருமன், நீரிழிவு நோய் போன்றவற்றை விரட்டி, நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம். மேலும் நல்லொழுக்கம், விளையாட்டு செயல் திறன் போன்றவற்றை மேம்படுத்தி கொள்ளலாம். நமது முன்னோர்களின் பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்றாததால், நமக்கு பல்வேறு உடல் நலக்குறைவுகள் ஏற்படுகிறது.

நாம் தினமும் ஒரு மணி நேரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன்மூலம் நாம் ஆரோக்கியமாக வாழலாம். மேலும் நாம் வருங்கால தலைமுறையினருக்கும் உடற்பயிற்சிகளையும், நல்ல பழக்கவழக்கங்களையும் பயிற்றுவிக்க வேண்டும். நவீன விஞ்ஞான முன்னேற்றம் காரணமாக, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை புறக்கணிக்க முயற்சிக்க கூடாது.

மாணவர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்து கொடுப்பது உடற்கல்வி ஆசிரியர்களின் கடமை. மேலும் மாணவர்கள் எந்த விளையாட்டில் ஆர்வமாக இருக்கின்றார்களோ, அந்த விளையாட்டை அவர்களுக்கு நுணுக்கமாக ஆர்வமுடன் கற்பித்து ஊக்குவிப்பதின் மூலம், அவர்களை சாதனைகளை படைக்க வைக்கலாம்.

ஆண்டுதோறும் சிறந்த உடற்கல்வி ஆசிரியருக்கு முதல்-அமைச்சரின் விருது வழங்கப்படுகிறது. ஆசிரியர் பணி ஒரு சிறந்த அறப்பணி. அதில் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். பட்டம் பெற்ற மாணவ- மாணவிகள் எப்போதும் சமுதாயத்தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். மேலும் வளமான மாணவ சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் பட்டம் பெற்ற மாணவ- மாணவிகள், கல்லூரி முதல்வர் பெவின்சன் பேரின்பராஜ் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய செசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குரு செல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையா ராஜ் மற்றும் பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்