ஓட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் - 2 அமைச்சர்கள் பங்கேற்பு

தூத்துக்குடியில் நடந்த அ.தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் 2 அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.;

Update: 2019-03-02 22:15 GMT
ஓட்டப்பிடாரம்,

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையம் முன்பு நடந்தது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. மோகன் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது;-

கடந்த தேர்தல் அறிக்கையில் கூறியதை விட அதிகமான திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்து உள்ளோம். மக்கள் விரும்புகின்ற மக்கள் நலக்கூட்டணியை அமைத்து தமிழகம், புதுச்சேரியில் 40 நாடாளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று புதிய வரலாற்று படைக்கும். தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அளவிற்கு திறன் படைத்த ஆட்சி மத்தியில் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி, சர்வதேச நாடுகளும் திரும்பி பார்க்கும் வகையில் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்கிறார். மோடியை மக்கள் ஆதரிப்பார்கள். இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அந்த முன்னோடி மாநிலத்தை அ.தி.மு.க. ஆட்சி செய்வது பெருமையாக உள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் அ.தி.மு.க.வின் கோட்டையாக மாற்றி காண்பிக்க வேண்டும். வரபோகும் தேர்தலில் வெற்றி என்பது நிச்சயம். அதே போல் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., நெல்லை-தூத்துக்குடி ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன்னாள் யூனியன் தலைவர் காமாட்சி என்ற காந்தி, கோவை எம்.எல்.ஏ.க்கள் கண்ணன், சண்முகம், ஓட்டப்பிடாரம் நகர செயலாளர் கொம்புமகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்