கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட கரடி தொழிலாளர்கள் பீதி

கோத்தகிரி அருகே தேயிலை தோட்டத்தில் முகாமிட்ட கரடியால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.

Update: 2019-03-02 22:30 GMT
கோத்தகிரி,

கோத்தகிரி அருகே மிஷன் காம்பவுண்டு பகுதி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளை சுற்றி தேயிலை தோட்டங்களும், வனப்பகுதியும் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக கோத்தகிரியில் கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக கரடிகள் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மிஷன் காம்பவுண்டு பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள தேயிலை தோட்டத்தில் கரடி ஒன்று முகாமிட்டு உள்ளது. இந்த கரடி தோட்டத்துக்குள் உணவு தேடி சுற்றித்திரிந்துவிட்டு, அங்குள்ள பாழடைந்த கட்டிடத்தில் ஓய்வெடுக்கிறது.

பகல் நேரத்திலேயே தேயிலை தோட்டத்திலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதியிலும் உலா வருவதால் தொழிலாளர்கள், பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மேலும் தோட்டத்துக்கு பச்சை தேயிலை பறிக்க செல்லும் தொழிலாளர்களை கரடி தாக்க முயலும் சம்பவமும் நிகழ்ந்து உள்ளது.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, தோட்டத்திலேயே சுற்றி வரும் கரடி அடிக்கடி குடியிருப்பு பகுதிக்கு சென்றுவிட்டு, மீண்டும் திரும்பி வந்து விடுகிறது. ஆனால் வனப்பகுதிக்குள் செல்வது இல்லை. பச்சை தேயிலை பறிக்க செல்லும் எங்களையும் தாக்க துரத்துகிறது. எனவே அந்த கரடியால் யாருக்கும் ஆபத்து ஏற்படும் முன், கூண்டு வைத்து பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்