அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா

அரவக்குறிச்சி, க.பரமத்தி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2019-03-02 22:30 GMT
அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி ஒன்றியம், புங்கம்பாடி கீழ்பாகம் ஊராட்சி, கணக்குவேலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்விச்சீர் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர் சித்ரா தலைமை தாங்கினார்.வட்டாரக் கல்வி அலுவலர் விஜயகருணாகரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் வேலுமணி வரவேற்றார். விழாவின் சிறப்பு விருந்தினர்களாக அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் வட்டார வள மேற்பார்வையாளர் சுதா, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஊர்பொதுமக்கள் கல்விச்சீராக ரூ.60 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை பள்ளிக்கு வழங்கினார்கள். முன்னதாக ஊர் பொதுமக்கள் சார்பில் மேளதாளங்கள் முழங்க கல்விச்சீர் பொருட்களை ஊர்வலமாக எடுத்து சென்றனர். இவ்விழாவில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் அமுதா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சித்ரா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி ஆசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினார்.

க.பரமத்தி ஒன்றியம், சி.கூடலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் கல்விச்சீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. க.பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலர் முருகன் தலைமை தாங்கி பெற்றோர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பள்ளிக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொண்டு பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் ஒப்படைத்தார். ஆசிரியப்பயிற்றுனர் கவிதா முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை ஜீவா அனைவரையும் வரவேற்றார். இதில் பள்ளி ஆசிரியைகள் வளர்மதி, கலைச்செல்வி மற்றும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் குமரவேல் நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்