ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுதான் நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் தினகரன் பேட்டி

‘‘ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுதான் நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும்’’ என்று மதுரையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

Update: 2019-03-02 23:30 GMT

மதுரை,

மதுரை விமான நிலையத்தில் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

பாகிஸ்தானிடம் சிக்கிய விமான படை கமாண்டர் அபிநந்தன் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பாகிஸ்தான் மீதான தாக்குதலில் 300 பேரை கொன்றது குறித்த ஆதாரம் இது வரை வெளியிடப்படவில்லை. புல்வாமா நிகழ்வு குறித்து பொதுமக்கள், இளைஞர்கள் மத்தியில் சந்தேகம் உள்ளதை சமூக வலைதளங்களில் எழுப்பபடும் கேள்விகள் மூலம் தெரிகிறது.

சுதந்திரத்திற்கு பின் இருந்த மத்திய அரசுகளை விட தற்போதைய மத்திய அரசு பழிவாங்கல் நடவடிக்கையை அதிகமாக மேற்கோள்கிறது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மோடிக்கு பின்னால் தமிழக மக்கள் இல்லை. ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். உள்ளிட்ட சிலர் மட்டுமே உள்ளனர்.

கடந்த கால அனுபவங்களில் மத்திய அரசால் தமிழகத்திற்கு ஏதும் கிடைக்கவில்லை. தமிழக மக்கள் தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழகம் இந்தியாவில்தான் உள்ளது என்ற நிலையை மறந்து, மத்திய அரசுகள் செயல்படுகின்றன.

விசுவாசமிக்க அ.தி.மு.க. தொண்டர்கள் எங்களிடத்தில் தான் உள்ளனர். ஜெயலலிதா விரும்பாத கட்சிகளோடு அ.தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் தனித்து போட்டியிட உள்ளோம். வெற்றி நிச்சயம்.

ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுதான் நாடாளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும். அ.ம.மு.க. வெற்றிபெறும். கூட்டணிகளை பார்த்து மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். தமிழகத்தின் முதல் அணி அ.ம.மு.க.தான். அது தேர்தல் முடிவில் தெரியும். நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்