பயிர் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு

பயிர் இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.;

Update: 2019-03-02 22:30 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் சிநேகவல்லி அம்மன் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த 2017–18–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி வருகிற 8–ந்தேதி சி.கே.மங்கலத்தில் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சேர்ந்த அனைத்து கிராம விவசாயிகளும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இப்போராட்டத்தை வழி நடத்த 13 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

அதன்பின்னர் விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் மருங்கூர் ராஜன், திருவெற்றியூர் கவாஸ்கர், தளிர்மருங்கூர் வெற்றிவேல் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:– திருவாடானை தாலுகா விவசாயிகளுக்கு கடந்த 2017–18–ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையை கடந்த ஆகஸ்டு மாதம் வழங்கிஇருக்க வேண்டும். ஆனால் மாவட்ட நிர்வாகம் இதுநாள் வரை இப்பகுதி விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது.

இதுதொடர்பாக விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்திய பிறகும் இதுவரை சரியான பதில் ஏதும் சொல்லாமல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்து வருகின்றனர். விரைவில் தேர்தல் வரும் நிலையில் அருகில் உள்ள புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டு விட்டது.

ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மட்டும் வழங்காமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இதையடுத்து வருகிற 8–ந்தேதி காலை 9 மணிக்கு சி.கே.மங்கலத்தில் திருவாடானை மற்றும் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவை சேர்ந்த அனைத்து கிராம விவசாயிகளும் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்