போலீஸ் வெடிகுண்டு சோதனை– பரபரப்பு நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் மிதந்த மர்ம மிதவை

நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் மர்ம மிதவை ஒதுங்கியது. அதில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-02 23:00 GMT

அரியாங்குப்பம்,

புதுவை மாநிலத்தில் முக்கிய சுற்றுலா தலமாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் விளங்குகிறது. இங்கிருந்து படகுகள் மூலம் பாரடைஸ் பீச்சுக்கு சென்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வது வழக்கம். நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த பாரடைஸ் பீச்சில் மர்ம மிதவை கரை ஒதுங்கி நின்றது. நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஊழியர்கள் இந்த மிதவையை பார்த்து திடுக்கிட்டனர்.

இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையொட்டி புதுச்சேரி தாசில்தார் ராஜேஷ்கண்ணா, அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, கடலோர காவல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்தர் ஆகியோர் அங்கு வந்து அந்த மிதவையை பார்வையிட்டனர்.

அப்போது அந்த மிதவையில் சிறிய அளவில் சாமி சிலை, பூஜை பொருட்கள் இருந்ததும், மிதவையை சுற்றி கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அதில் மியான்மர் நாட்டு தேசிய கொடிகளும் இருந்தன. மியான்மர் நாட்டில் தயாரிக்கப்பட்ட தண்ணீர் பாட்டிலும் இருந்தது.

காற்று, அலைகளின் வேகத்தால் இந்த மிதவை கடலில் அடித்து வரப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் அதில் சாமி சிலை மற்றும் பூஜை பொருட்கள் இருந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அந்த மிதவையில் வெடிபொருட்கள் ஏதேனும் உள்ளதா? என்பதை கண்டறிய போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் மிதவையில் சோதனை நடத்தப்பட்டது. அதில் இருந்த தண்ணீர் பாட்டிலில் நோய் பரப்பும் கிருமிகள் கலந்து உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மர்ம மிதவை மிதந்ததும், அதில் சோதனை நடத்தப்பட்டதும் பாரடைஸ் பீச்சில் பரபரப்பை ஏற்படுத்தியது. சோதனை முடிவில் வெடிபொருட்கள் ஏதுவும் இல்லை என்று தெரியவந்தது. அதனையடுத்து அந்த மிதவை முழுவதுமாக பிரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. அதில் இருந்த பொருட்களை சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் கைப்பற்றி தாசில்தார் ராஜேஷ்கண்ணாவிடம் ஒப்படைத்தார்.

மேலும் செய்திகள்