ராசிபுரம் அருகே இன்சூரன்ஸ் முகவர் கடத்தி சிறை வைப்பு 3 பேர் கைது

ராசிபுரம் அருகே இன்சூரன்ஸ் முகவர் கடத்தி சிறை வைக்கப்பட்டார். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-03-02 21:45 GMT
நாமகிரிப்பேட்டை, 

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையை சேர்ந்தவர் சிவபிரகாசம்(வயது 40). தனியார் நிறுவன இன்சூரன்ஸ் முகவர். இவர் மின்னக்கல்லை சேர்ந்த கிருஷ்ணன்(54), வெங்கடாசலம்(51), அன்புமணி, சேலத்தை சேர்ந்த சுப்பிரமணியம்(65) ஆகியோரிடம் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு ரூ.3½ லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இவர் தொடர்ந்து வட்டி பணம் கொடுத்து வந்து உள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரிவர வட்டி பணம் கொடுக்கவில்லை. வட்டி பணம் கேட்டதற்கு தருவதாக காலம் கடத்தி வந்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று நாமகிரிப்பேட்டையில் இருந்து ராசிபுரத்துக்கு சிவபிரகாசம் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது இவரை மின்னக்கல்லை சேர்ந்த ரஞ்சித், கப்பங்காட்டை சேர்ந்த முரளி மற்றும் வட்டிக்கு பணம் கொடுத்த 4 பேரும் ஒரு காரில் பின் தொடர்ந்து சென்றனர்.

காக்காவேரி அருகே ஒரு பாலிடெக்னிக் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற சிவபிரகாசத்தை தடுத்து நிறுத்தி காரில் மிரட்டி ஏற்றி கொண்டனர். பின்னர் அவரை காரில் சிவபிரகாசத்தை கடத்தி மின்னக்கல்லுக்கு கொண்டு சென்றனர். அங்குள்ள கிருஷ்ணன் என்பவரது வீட்டுக்குள் அவரை சிறை வைத்து அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சிவபிரகாசம் கடத்தப்பட்ட தகவல் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசுவுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) தினேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டுக்குள் அடைக்கப்பட்டு இருந்த சிவபிரகாசத்தை மீட்டனர்.

இது தொடர்பாக மின்னக்கல்லை சேர்ந்த கிருஷ்ணன், வெங்கடாசலம், சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மற்ற 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்