ஓடும் ரெயில் மீது கற்களை வீசினால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

ஓடும் ரெயில் மீது சிறுவர் கள் கற்களை வீசினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல் ரெயில்வே போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-03-02 22:15 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் ரெயில் பயணிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பாலகிருஷ்ணாபுரம் ரெயில்வே கேட் அருகில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். அப்போது ரெயில்வே கேட் அடைக்கப்படும் போது, தண்டவாளத்தை கடக்க முயற்சிக்க கூடாது என தெரிவித்தனர். அதற்கு பொதுமக்கள், நீண்ட நேரம் ரெயில்வே கேட் அடைக்கப்படுவதாலேயே நாங்கள் அவ்வாறு செல்ல முயல்கிறோம் என்றனர்.

இதையடுத்து போலீசார் ரெயில்வே கேட் கீப்பரிடம் இதுகுறித்து கேட்டனர். அப்போது இப்பகுதியில் சிக்னல் இல்லாததால் ரெயில் வருவது குறித்த தகவல் உடனடியாக தெரியாது. இதனாலேயே காலதாமதம் ஏற்படுகிறது என்றார். பின்னர் பொதுமக்களிடம் பேசிய போலீசார் ரெயில் கடந்து செல்லும் வரை சிறிது நேரம் காத்திருந்து செல்லும்படி அறிவுறுத்தினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், ஓடும் ரெயிலின் பெட்டிகள் மீது சிறுவர்கள் கற்களை வீசிச்செல்வதாக புகார் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கூட ரெயில் பெட்டிகள் மீது ஒரு சிறுவன் கற்களை வீசியதில் ஒரு சிறுமி படுகாயமடைந்தாள். பின்னர் அந்த சிறுவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. எனவே இனிவரும் காலங்களில் ரெயில் பெட்டிகள் மீது கற்களை வீசினாலோ, தண்டவாளத்தில் கற்களை அடுக்கி வைத்தாலோ சம்பந்தப்பட்ட சிறுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதேபோல் கொடைரோடு ரெயில் நிலையத்திலும் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் பெண் பயணிகள் ஜன்னலோரத்தில் அமர்ந்து பயணம் செய்யும் போது நகைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அறிமுகம் இல்லாதவர்கள் கொடுக்கும் உணவு பொருட் களை வாங்கி சாப்பிடக்கூடாது போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.

அவசர உதவிக்கு பயணிகள் 9962500500 என்ற செல்போன் எண்ணில் அழைக் கலாம் என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர்.

பழனி ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் பாதுகாப்பு குறித்த துண்டுபிரசுரங்களை ரெயில்வே போலீசார் வினியோகம் செய்தனர். இதில் அறிமுகம் இல்லாத நபர்கள் கொடுக்கும் உணவுப்பொருட்களை சாப்பிடவோ, குளிர்பானங்களை அருந்தவோ வேண்டாம். பெண்கள் தங்கநகைகளை அணிந்து பயணம் செய்யும் போது நகைகளை சேப்டிபின்னுடன் இணைத்து பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும். பயணிகள் தூங்கும் நேரங்களில் ஜன்னல் கதவுகளை மூடிக்கொண்டு பாதுகாப்பாக பயணம் செய்யவேண்டும். பயணத்தின் போது ஓடும் ரெயிலில் இருந்து இறங்கவோ, ஏறவோ கூடாது. படியில் நின்று பயணம் செய்வதும், செல்போன் பேசுவதும் ஆபத்தானது ஆகும். ரெயில்வே கேட்டை கடக்கும் போது இருபுறத்திலும் கவனித்து பாதுகாப்பாக செல்லவேண்டும். ரெயில் பயணத்தின் போது அவசர உதவி மற்றும் சந்தேக நபர்களை பார்த்தால் 1512 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த துண்டுபிரசுரத்தை பழனி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையில் ஏட்டு பெருமாள்சாமி மற்றும் போலீசார் ரெயில் பயணிகளிடம் வழங்கினர்.

மேலும் செய்திகள்