விழுப்புரத்தில் ஓடும் ரெயிலில் அரசு பெண் ஊழியரிடம் கைப்பை பறிப்பு வாலிபர் கைது
விழுப்புரத்தில் ஓடும் ரெயிலில் அரசு பெண் ஊழியரிடம் கைப்பையை பறித்துச் சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
விழுப்புரம்,
சென்னை அருகே உள்ள திருமங்கலம் அண்ணாநகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் மனைவி ஜெயந்தி (வயது 48). இவர் சென்னை அரசு தலைமை செயலகத்தில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவருடைய மகன் பிரவீன் (25) திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவரை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு சென்னை எழும்பூரில் இருந்து பைசாபாத்- ராமேஸ்வரம் செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சிக்கு ஜெயந்தி பயணம் செய்தார்.
இந்நிலையில் இரவு 11 மணியளவில் இந்த ரெயில் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு வந்து விட்டு, மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் மருதூர் என்ற இடத்தில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஜெயந்தி இருந்த பெட்டியில் பயணம் செய்த வாலிபர் ஒருவர், திடீரென ஜெயந்தியிடம் இருந்த கைப்பையை பறித்துக்கொண்டு ரெயிலில் இருந்து கீழே குதித்து விட்டார்.உடனே ஜெயந்தி, இதுபற்றி விழுப்புரம் ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதில் ரெயிலில் பயணம் செய்தபோது தன்னுடைய கைப்பையை ஒருவர் பறித்துச் சென்று விட்டதாகவும், அந்த கைப்பையிக்குள் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை இருந்ததாக கூறினார்.
தகவலின்பேரில் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று ரெயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் ஒரு வாலிபர், கைப்பையுடன் நின்று கொண்டிருந்ததை பார்த்த போலீசார், அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த சுரேஷ் மகன் சரவணன் (25) என்பதும் ஜெயந்தியின் கைப்பையை பறித்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து சரவணனை போலீசார் கைது செய்து அவரிடமிருந்த கைப்பையை பறிமுதல் செய்தனர். பின்னர் ஜெயந்தியை போலீசார் வரவழைத்து அவரிடம் கைப்பையை ஒப்படைத்தனர்.