மின்கம்பங்களில் கட்டப்படும் விளம்பர பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்
உடுமலையில் மின்கம்பங்களில் விளம்பர பதாகைகள் கட்டப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போடிபட்டி,
விதிகளை மீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள் பல விபத்துகளுக்கு காரணமாகிறது. இதனால் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அனுமதியின்றி விளம்பர பதாகைகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத உள்ளாட்சி நிர்வாகங்களை ஐகோர்ட்டு எச்சரித்தது. இதனையடுத்து முக்கிய வீதிகளிலிருந்த விளம்பர பதாகைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் அப்புறப்படுத்தின.
இந்தநிலையில் உடுமலை நகரில் மீண்டும் முளைத்துள்ள விளம்பர பதாகைகளை உள்ளாட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்ளாமலிருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மின் கம்பங்களில் ஆபத்தான முறையில் விளம்பர பதாகைகள் கட்டப்படுவதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:–
நகரம் மற்றும் கிராமப்புறங்களில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் விளம்பர பதாகைகள் வைக்கப்படுகிறது. இவ்வாறு விளம்பர பதாகைகள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் காவல்துறை என்று இடத்திற்கு தகுந்தாற்போல் அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் அமைப்பது தொடர்கதையாக உள்ளது.
குறிப்பாக இவ்வாறு அமைக்கப்படும் பதாகைகள் போக்குவரத்து மிகுந்த முக்கிய சந்திப்புகளில் அதிக அளவில் அமைக்கப்படுகிறது. இதனால் வளைவுகளில் திரும்பும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமலும், கவனச்சிதறலாலும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
இந்தநிலையில் உடுமலை நகரப்பகுதியில் பல இடங்களில் மின்கம்பங்களில் அமைக்கப்படும் விளம்பர பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பொள்ளாச்சி ரோடு தளி ரோடு சந்திப்பு, பசுபதி வீதி தளி ரோடு சந்திப்பு போன்ற பல பகுதிகளில் மின் கம்பத்தையே தாங்கு கம்பமாக பயன்படுத்தி விளம்பர பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் மின் கம்பத்திலுள்ள மின் விளக்குகள் பழுதானாலோ வேறு பழுது ஏற்பட்டாலோ மின் வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களில் ஏறி பழுது நீக்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் நகரின் பல பகுதிகளில் மின் கம்பங்களில் சிறிய அளவிலான விளம்பர தட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் மின் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
இவ்வாறு விளம்பர பதாகைகள் அமைப்பதற்கான உள்ளாட்சி நிர்வாக விதிகளை மீறி நகராட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் விதமாகவும், மின்வாரிய விதிகளை அலட்சியப்படுத்தும் விதமாகவும் விளம்பர பதாகைகள் அமைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தயங்குவது ஏன்? என்று தெரியவில்லை. எனவே அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும்.
இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினார்கள்.