100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றச்சாட்டு

100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று எல்லாபுரம் ஒன்றிய கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

Update: 2019-03-02 22:00 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் வடக்கு மாவட்டம் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ஏனம்பாக்கம், கல்பட்டு, மாளந்தூர் ஆகிய 3 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு ஒன்றியச்செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாநில சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள், தங்களது பகுதிக்கு பஸ், கால்நடை மருத்துவமனை, சாலை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். ரேஷன் பொருட்கள் சரிவர வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டி கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.

மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 நாள் வேலைத்திட்டத்தில் சரிவர பணி வழங்குவதில்லை, இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றியதற்கு உரிய சம்பளம் கிடைக்கவில்லை, ஆரணி ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் தண்டலம் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ஏ.வி.ராமமூர்த்தி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் லோகேஸ், ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருவள்ளூரை அடுத்த சேலை ஊராட்சியிலும் தி.மு.க. சார்பில் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருவள்ளூர் தெற்கு ஒன்றியச்செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார்.

மேலும் செய்திகள்