ஓசூரில் பஸ் மீது மோதிய காரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்

ஓசூரில் பஸ் மீது மோதிய காரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

Update: 2019-03-02 22:00 GMT
ஓசூர், 

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக அரசு பஸ், விழுப்புரம் நோக்கி சென்றது. இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பஸ் நிலையம் அருகே அந்த பஸ், பயணிகளை ஏற்றி செல்வதற்காக நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த ஒரு கால் டாக்சி திடீரென அரசு பஸ் மீது மோதியது.

அந்த கால் டாக்சி டிரைவர் லட்சுமிகாந்த் என்பவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர், அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்கும், லட்சுமிகாந்துக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதைப் பார்த்து ஆத்திரமடைந்த அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் அந்த கால்டாக்சியை கற்களாலும், கம்புகளாலும் அடித்து நொறுக்கினர். இதில் கார் கண்ணாடிகள் சுக்கு நூறாக உடைந்தன. மேலும் டிரைவர் லட்சுமி காந்தனையும் தாக்கினர். இதனால் அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதையடுத்து காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். பொதுமக்கள் காரை அடித்து நொறுக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்