ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறையை நீக்கியுள்ளோம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறையை நீக்கியுள்ளோம் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2019-03-02 23:00 GMT

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்காட்டுப்பாளையம், வெள்ளாங்கோவில், கொளப்பலூர், நாதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் ரூ.5 கோடி மதிப்புள்ள வளர்ச்சி திட்டப்பணிகளை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா தலைமை தாங்கினார்.

அதன்பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த ஆட்சி பல்வேறு திட்டப்பணிகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. பிளஸ்–2 தேர்வை மாணவ–மாணவிகள் அச்சமில்லாமலும், தைரியத்தோடும் எழுத வேண்டும். இது அதிக மதிப்பெண் பெற வழிவகை செய்யும்.

இந்த ஆண்டு முதல் பிளஸ்–2 படித்தவுடனே சி.ஏ. என்று சொல்லப்படும் பட்டய கணக்காளர் படிப்பிற்கு 2 ஆயிரம் மாணவர்கள் சிறப்பு பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மதுரை, திருநெல்வேலி, வேலூர், திருச்சி, கோவை, சென்னை ஆகிய இடங்களில் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

மாணவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படும். ஐ.சி.டி. திட்டத்தின் கீழ் 8 முதல் 12–ம் வகுப்பு வரை 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள், 9, 10, 11, 12–ம் வகுப்புகளில் இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் அறை அமைத்து தரப்படும். இந்த திட்டத்தை சென்னையில் நாளை (திங்கட்கிழமை) முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.

பிளஸ்–2 படித்த, படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு விரைவில் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட உள்ளன. மேலும், மேல்நிலைப்பள்ளிக்கூட ஆசிரியர்கள் 60 ஆயிரம் பேர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும். 2013–ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறையை நீக்கியுள்ளோம். அதுவே, அவர்களுக்கு மிகப்பெரிய சலுகையாகும்.

வேலை வாய்ப்பிற்கு ஏற்ப ஒரு சிறிய தகுதித் தேர்வை நடத்தி ஆசிரியர் வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்வு சிறப்பாசிரியர்களுக்கான தேர்வாகும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பிசுப்பிரமணியம் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்