கொடுமுடியில் கணவன்– மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை உடல்நிலை பாதிப்பால் விபரீத முடிவு

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கொடுமுடியில் கணவன்–மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்கள்.

Update: 2019-03-02 22:45 GMT

கொடுமுடி,

திருப்பூர் மாவட்டம் குண்டடத்தை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 79). விவசாயி. இவருடைய மனைவி அங்கத்தாள் (70). இவர்களுடைய மகள் தமிழ்செல்வி (53), மகன் சண்முகசுந்தரம் (49).

தமிழ்செல்வியும், சண்முகசுந்தரம் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் குண்டடத்திலேயே வேறு பகுதியில் வசித்து வருகிறார்கள். அதனால் கந்தசாமியும், அங்கத்தாள் மட்டும் அவர்களுடைய வீட்டில் இருந்து வந்தனர். இருவருக்குமே உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்கள். முதுமை காரணமாக நோயும் குணமாகவில்லை. இதனால் இனி வாழ்வதைவிட சாவதே மேல் என்று இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு வந்தனர். அங்குள்ள பிரசித்திபெற்ற மகுடேசுவரர் வீரநாராயணபெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்கள். பின்னர் காவிரிக்கரைக்கு சென்று, தாங்கள் வாங்கி வந்திருந்த வி‌ஷத்தை இருவரும் குடித்துவிட்டதாக தெரிகிறது. இதனால் சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கிவிழுந்து விட்டார்கள். அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து உடனே கொடுமுடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் மலையம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி (கொடுமுடி பொறுப்பு) போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக இருவரும் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்.

இதற்கிடையே தந்தையும், தாயும் வி‌ஷம் குடித்துவிட்ட தகவல் அறிந்து ஈரோடு ஆஸ்பத்திரிக்கு வந்த சண்முகசுந்தரம் இருவரையும் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் நேற்று காலை 7 மணி அளவில் அங்கத்தாள் இறந்தார். பகல் 12.20 மணிக்கு கந்தசாமியும் இறந்துவிட்டார்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நோய் குணமாகாததால் கணவன்–மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட இந்த சம்பவம் குண்டடம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்