ஆம்பூரில் தொழிலாளி மர்மச்சாவு அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை

ஆம்பூரில் ரத்த காயங்களுடன் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர், அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-03-02 22:00 GMT
ஆம்பூர், 

ஆம்பூர் ஏ.கஸ்பா பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 60). டெய்லரிங் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல வேலைக்கு சென்றவர் அதன்பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை ராஜீவ்காந்தி நகரில் உள்ள அண்ணாமலையார் தெருவில் ரமேஷ் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்துகிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆம்பூர் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேஷ் குடிபோதையில் தவறி கீழே விழுந்து இறந்தாரா? அல்லது முன்விரோத தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்