தமிழகத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைத்து காடுகளை பாதுகாக்க வேண்டும் அமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் தீ தடுப்பு கோடுகள் அமைத்து காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2019-03-02 23:00 GMT
கன்னியாகுமரி,

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நெல்லை வன மண்டலம், கன்னியாகுமரி வன உயிரின சரணாலயத்துக்கு உட்பட்ட வனத்துறை அதிகாரிகளின் கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது.

இதில் வனத்துறை தலைவர் மல்லேசப்பா, சென்னை அரசு ரப்பர் கழக தலைவர் துரைராசு, களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக கள இயக்குனர் அன்வர்தீன், நெல்லை மண்டல வன பாதுகாவலர் தின்கர்குமர், நாகர்கோவில் அரசு ரப்பர் தோட்ட தலைமை வன பாதுகாவலர் வேணுபிரசாத், நெல்லை கோட்ட வன அலுவலர் திருமால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் காடுகளில் ஏற்படும் தீ விபத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:–

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக வனப்பகுதியில் தீ பரவாமல் தடுப்பதற்கு தேவையான தீ தடுப்பு கோடுகள் அமைத்து காடுகளை பாதுகாக்க வேண்டும். மேலும் தீ தடுப்பு பணியாளர்களை நியமிப்பதுடன், வனப்பகுதிக்குள் அனுமதியில்லாமல் யாரும் உள்ளே நுழையாதவாறு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வனப்பகுதிக்குள் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு, வனப்பகுதியையொட்டி வசிக்கும் மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும். அப்போது அவர்களிடம் வனம் மற்றும் வன உயிரினங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கி, துண்டு பிரசுரம் வினியோகம் செய்ய வேண்டும்.

இதுதவிர கிராமங்களில் தண்டோரா போட்டு வனப்பகுதியில் தீ விபத்து தடுப்பு அவசியம் குறித்தும் விளக்க வேண்டும். முக்கியமாக சுற்றுலா பகுதிகளையொட்டி உள்ள வனப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், எளிதில் தீ ஏற்படக்கூடிய பொருட்களை வனப்பகுதியில் விட்டு செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்