வருவாய்த்துறை அலுவலர்கள் 3–வது நாளாக போராட்டம்

28–ந் தேதி முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது.

Update: 2019-03-02 22:45 GMT
நாகர்கோவில்,

நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் தாசில்தார்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து கடந்த 28–ந் தேதி முதல் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பணி புறக்கணிப்பு போராட்டம் நடந்து வருகிறது. நேற்று 3–வது நாளாக நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்திலும், பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்திலும், தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகத்திலும், குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காலை 10.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடந்தது. பின்னர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகஸ்தீஸ்வரம் வட்டம் சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் கோலப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் மணிகண்டன், ரவிச்சந்திரன், ஆனந்த் சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் மற்ற வட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்