கருப்பு கொடி போராட்டம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் காங்கிரசார் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 62 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்துக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். அதன்படி நாகர்கோவில் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு காங்கிரசார் நேற்று கருப்புக்கொடியுடன் போராட்டம் நடத்தினர். இதற்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். பிரின்ஸ் எம்.எல்.ஏ., மாவட்ட துணைத்தலைவர் மகேஷ்லாசர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் போராட்டத்தின் போது பிரதமருக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பிரின்ஸ் எம்.எல்.ஏ., வக்கீல் ராதாகிருஷ்ணன் உள்பட 50 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றி அருகில் உள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
இதேபோல், அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராஜஜெகன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் கருப்புக்கொடி காட்ட கொட்டாரத்துக்கு வந்தனர். அப்போது அங்கு தயாராக இருந்த போலீசார், காங்கிரஸ் கட்சியினர் 12 பேர்களையும் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர். இதில் நிர்வாகிகள் ஜார்ஜ் வாஷிங்டன், தங்கம் நடேசன், அரிகிருஷ்ண பெருமாள், சோரீஸ், ஸ்ரீராமன் நெப்போலியன் ஆகியோர் பங்கேற்றனர்.