விபத்தில் காயம் அடைந்த 2 பேருக்கு ரூ.5½ லட்சம் நஷ்ட ஈடு - தஞ்சை கோர்ட்டு உத்தரவு

சாலை விபத்துகளில் காயமடைந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு ரூ.5½ லட்சம் நஷ்ட ஈடு வழங்க தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டது.;

Update: 2019-03-01 23:12 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை மானோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது43). ஆசாரி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந் தேதி புதுக்கோட்டை சென்றிருந்தார். அப்போது கந்தர்வக்கோட்டை கறம்பக்குடி சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்றார்.

அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார்சைக்கிள் பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லுாரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இந்த நிலையில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு கோரி தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க தஞ்சை நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நேற்று உத்தரவிட்டார்.

தஞ்சை பூக்கார விளார் சாலையை சேர்ந்தவர் வாசுகி (45). பால் வியாபாரி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி மதுரை சென்றிருந்தார். அங்கு பனகல் சாலையில் நடந்து சென்ற போது எதிரே வந்த மோட்டார்சைக்கிள் வாசுகி மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் தஞ்சை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மேலும் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு கோரி தஞ்சை மோட்டார் வாகன இழப்பீட்டு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி பூர்ணஜெயஆனந்த் விசாரித்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க திருச்சி ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு நேற்று உத்தரவிட்டார். இந்த 2 வழக்குகளிலும் மொத்தம் ரூ.5 லட்சத்து 46 ஆயிரம் வழங்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்