நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-03-01 22:00 GMT
திருவண்ணாமலை,

ஆரணி அருகில் நடுப்பட்டு கிராமமானது விண்ணமங்கலம் மற்றும் கோணையூர் ஊராட்சிகளின் நிர்வாகத்திற்குள் உள்ளது. நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று அந்த கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது “நடுப்பட்டு கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையென்றால் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம்” என்று கோஷங்கள் எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருவண்ணாமலை ஊராட்சிகள் உதவி இயக்குனர் அரவிந்தன் முதலில் பேச்சுவார்த்தை நடத்தினார். நாங்கள் கலெக்டரை நேரில் சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர்ந்து சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். அவர் மீது தண்ணீர் தெளித்து மயக்கம் தெளியவைத்தனர்.

இதற்கிடையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், தாங்கள் கொண்டு வந்த வாக்காளர் அடையாள அட்டையையும் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்று கூறி அவற்றை காணப்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி காரில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அழைத்து பேசினார். அப்போது பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், “எங்கள் கிராமத்தில் 1,099 வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் கிராமம் ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளாக பிரிந்து உள்ளது. இதில் ஆரணி தொகுதியில் 871 வாக்காளர்களும், போளூர் தொகுதியில் 228 வாக்காளர்களும் உள்ளனர். இதனால் எங்களின் பிரதிநிதிகளை எங்களால் தேர்வு செய்ய முடியவில்லை. 2 பிரிவுகளாக உள்ள எங்கள் கிராமத்தை ஒன்றிணைத்து தனி ஊராட்சியாக அமைத்து கொடுத்தால் எங்களின் பிரதிநிதிகளை நாங்கள் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் எங்கள் கிராமத்தின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து கொள்வோம். தற்போது எங்கள் கிராமம் குடிநீர் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருகிறது. இதனால் 2 பகுதி மக்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இது குறித்து பல முறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் கிராம மக்கள் ஒன்றிணைந்து தனி ஊராட்சி அமைத்து தர வேண்டும்” என்றனர்.

அவர்களிடம் கலெக்டர் கூறுகையில், “தனி ஊராட்சி அமைக்க முடியுமா என்று ஆய்வு செய்து அதற்கான ஆவணங்களை நாங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு மதிய உணவு கொண்டு வந்து அங்கேயே சாப்பிட்டனர்.

மேலும் செய்திகள்