ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப எடுத்துச்சென்ற ரூ.1.93 கோடியை சுருட்டிய பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 3 பேர் கைது

பெங்களூருவில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப எடுத்து சென்ற ரூ.1.93 கோடியை சுருட்டிய பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-03-01 22:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு ஆனே பாளையா அருகே கஜேந்திரநகரில் தனியார் பாதுகாப்பு நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. அந்த பாதுகாப்பு நிறுவனத்தில் கோரமங்களா அருகே ராஜேந்திரா நகரை சேர்ந்த சங்கர் (வயது 38) என்பவர் ஊழியராக வேலை செய்தார். இவர், பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து பணத்தை, வாகனத்தில் எடுத்துச்சென்று நகரில் உள்ள பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.

இதற்கிடையில், கடந்த மாதம் (பிப்ரவரி) 1-ந் தேதி பாதுகாப்பு நிறுவனம் சார்பில் ஏ.டி.எம். மையங்களில் நிரப்பப்பட்ட பணம் சரியாக உள்ளதா? என்று அந்த நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்து சென்ற பின்பு கூட, மீதம் இருக்க வேண்டியதில் ரூ.1.93 கோடி குறைவாக இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

உடனே சங்கரை அழைத்து ஏ.டி.எம். மையங்களில் நிரப்பப்பட்ட பணம் குறைவாக இருப்பது குறித்து அதிகாரிகள் கேட்டனர். அப்போது அவர் பணம் குறைந்திருப்பது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி விட்டார். அதே நேரத்தில் மறுநாளில் இருந்து சங்கர் வேலைக்கு வரவில்லை. இதனால் அவரே ரூ.1.93 கோடியையும் சுருட்டி இருக்கலாம் என்று பாதுகாப்பு நிறுவன அதிகாரிகள் கருதினார்கள். இதுபற்றி அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு நிறுவனத்தின் அதிகாரி நரேந்திரசிங் கவுரங் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை தேடிவந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில், ரூ.1.93 கோடியை சுருட்டிய வழக்கில் தலைமறைவாக இருந்த சங்கர், அவரது நண்பர்கள் 2 பேரை கைது செய்து அசோக்நகர் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், சங்கரின் நண்பர்கள் பி.டி.எம். லே-அவுட்டை சேர்ந்த பசவராஜ் (36), சிக்கமகளூருவை சேர்ந்த அவினாஷ்(29) என்று தெரியவந்தது. இவர்களில் சங்கர், அந்த பாதுகாப்பு நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்திருந்தார். அவர் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டுள்ளார்.

இதற்காக ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப எடுத்து செல்லும் பணத்தை கையாடல் செய்ய தனது நண்பர்கள் பசவராஜ், அவினாசுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார். பின்னர் தன்னுடன் பணம் நிரப்ப வரும் காவலாளிக்கு தெரியாமல் நகரில் உள்ள ஏ.டி.எம். மையங்களுக்கு பசவராஜ், அவினாசை வரவழைத்து, அவர்களிடம் ரூ.1.93 கோடியை சங்கர் கொடுத்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் கைதான 3 பேரிடம் இருந்து ரூ.1.93 கோடியை போலீசார் இன்னும் மீட்கவில்லை. அதுகுறித்து 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் பணம் மீட்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சங்கர், பசவராஜ், அவினாசை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு, அவர்களை போலீஸ் காவலில் எடுத்து அசோக்நகர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்