புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 18,580 மாணவர்கள் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 18 ஆயிரத்து 580 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

Update: 2019-03-01 22:30 GMT
புதுக்கோட்டை, 

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 82 மையங்களில் தமிழ் தேர்வு நேற்று நடந்தது. இதையொட்டி மாணவ, மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர்.

தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ- மாணவிகள் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தனர். பின்னர் 10 மணியளவில் வினாத்தாள் அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி மற்றும் இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 கல்வி மாவட்டங்களையும் சேர்த்து 20 ஆயிரத்து 888 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத இருந்தனர். இதில் 36 பேர் தனித்தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நேற்று நடந்த தேர்வில் 8 ஆயிரத்து 272 மாணவர்களும், 10 ஆயிரத்து 308 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 580 பேர் தேர்வு எழுதினர். இதில் 31 தனித்தேர்வர்களும் அடங்குவர். மேலும் நேற்று நடந்த தேர்வில் ஆயிரத்து 234 மாணவர்களும், ஆயிரத்து 74 மாணவிகளும் என மொத்தம் 2 ஆயிரத்து 308 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வில் மனவளர்ச்சி குன்றிய 39 மாணவ-மாணவிகளும், பார்வை குறைபாடுடைய 8 மாணவ- மாணவிகளும் தேர்வு எழுதினர்.

தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 82 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை கண் காணித்து வந்தனர்.

ஒரு மையத்திற்கு இரண்டு கண்காணிப்பாளர்கள் வீதம் 82 மையங்களில் 164 பேர் தேர்வினை கண்காணித் தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வினை முன்னிட்டு தேர்வு நடைபெறும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர் வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி நேரில் சென்று தேர்வு மையத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி வனஜா, ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்